‘மாணவிகளை சீரழித்ததாக மூவர் மீது வில்லங்க குற்றச்சாட்டு! – மதுரைவாசிகள் மத்தியில் பரபரப்பு!’ என்னும் தலைப்பில், நேற்றைய தினம் நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த விவகாரம் குறித்து, மதுரை மாநகர் காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், மதுரையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக 3 இளைஞர்கள் மீது புகார் அடங்கிய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக புகார் ஏதேனும் தெரிவிக்க விரும்புபவர்கள், கீழ்க்கண்ட எண்களில் தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு, காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) 9498129498, காவல் ஆய்வாளர் ஹேமமாலா 8300017920, காவல் ஆய்வாளர் (கடுமையான குற்றங்கள் விசாரணைப் பிரிவு) ஸ்ரீனிவாஸன் 9790599332 ஆகியோரின் தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அந்த மூன்று இளைஞர்களால் பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் நடந்திருந்தால், எந்தெந்த எண்களில் தொடர்புகொள்ள வேண்டும் என்ற விபரத்தையும், புகார் தெரிவிப்பவர் குறித்த அடையாளம் பாதுகாக்கப்படும் என்ற காவல்துறையின் உத்தரவாதத்தையும், தற்போது படித்துவரும் மாணவிகள், பழைய மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோருக்கு, மேற்கண்ட தகவலோடு கிடைக்கும்படி செய்யவும் என்று மதுரை நகர டி.சி.பி. (சட்டம் ஒழுங்கு) கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.
யாரோ ஒரு மர்மநபர் பரப்பிய வாட்ஸ்-ஆப் தகவல் என்றாலும், பள்ளி, கல்லூரி மாணவிகளை பாதிக்கக்கூடிய விஷயம் என்பதால், ‘பாலியல் குற்றம் நடந்தது உண்மையா? வதந்தியா?’ என்பதை கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறது, மதுரை மாநகர் காவல்துறை!