மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தர்கா இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில், நேற்று (26/06/2021) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் இருந்த கொடி மரத்தை இந்து அமைப்பினர் காவல்துறை உதவியுடன் அகற்றியதாகக் கூறி எஸ்.பி.டி.ஐ. கட்சியினர் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் காவல்துறை வாகனங்களில் அழைத்துச்சென்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் கட்டப்பட்டிருந்தக் கொடிகளை அகற்றிய இந்து அமைப்பினரை கைது செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்து, முஸ்லீம்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் திடீர் போராட்டத்தால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.