மதுரை மத்தியச் சிறையில், இரண்டு வார்டன்களுக்கும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்று, சிறையிலுள்ள குவார்ட்டர்ஸுக்கு திரும்பினார்கள். வீட்டிலேயே, தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள, அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
ஜெயில் குவார்ட்டர்ஸில் உள்ள வீட்டில் அவர்கள் தங்கியிருந்த விஷயம் உயர் அதிகாரிக்கு தெரிந்ததும், “அவங்க எப்படி குவார்ட்டர்ஸுக்கு வரலாம்?” என்று வானத்துக்கும் பூமிக்குமாக குதித்திருக்கிறார் உயரதிகாரி. ஜெயிலர், ஹெட் வார்டன் என ஒவ்வொருவராக அனுப்பி, “இது உயரதிகாரி உத்தரவு.. நீங்க இங்கே இருக்கக்கூடாது.. உடனே கிளம்புங்க..” என்று குடைச்சல் கொடுத்தார். “நாங்க எங்கே போக முடியும்?” என்று அவர்கள் கேட்டதற்கு, “உங்களுக்கென்றே 4 ஓட்டு வீட்ட ஒதுக்கி வச்சிருக்கோம்..” என்று, உயர் அதிகாரி சொன்னதை ஒப்பித்துள்ளனர், ஜெயிலரும், ஹெட் வார்டனும்.
“அந்த பழைய கட்டடத்த இடிக்கணும்னு ஆர்டரே இருக்கு. பாம்பு, பல்லி அடைஞ்சு பாழடைஞ்சு கிடக்கிற அந்த ஓட்டு வீட்ல மனுஷன் எப்படி குடியிருக்க முடியும்?” என்று தங்களைத் தனிமைப்படுத்தி இருந்தவர்கள் கேட்க, “நீங்க அங்கேதான் இருக்கணும்.. குவார்ட்டர்ஸ்ல இருந்தா எல்லாருக்கும் பரவும். இல்லைன்னா உங்க சொந்த ஊருக்கு கிளம்புங்க.. இது மேலதிகாரியோட உத்தரவு..” என்று கறார் காட்டியுள்ளனர். வேறு வழியின்றி, அந்த வார்டன் குடும்பம் வரிச்சியூர் பக்கம் உள்ள கிராமத்துக்குப் போனது. இன்னொரு வார்டன், தனது மோட்டார் பைக்கிலேயே திருநெல்வேலி கிளம்பினார்.
சாத்தூர் மகளிர் சிறையில் பணிபுரிந்த முதல் தலைமைப் பொறுப்பிலுள்ள பெண் காவலர் ஒருவர், நிர்வாகக் காரணங்களுக்காக, மதுரை மத்தியச் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை மதுரையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு ‘டிரான்ஸ்ஃபர்’ செய்தார், அந்த உயரதிகாரி. அவரும் கிருஷ்ணகிரி மகளிர் சிறைக்குச் சென்றார். அங்கு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள, அவர் அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவர, அங்கே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். பிறகு, ‘டிஸ்சார்ஜ்’ ஆன அவரை, அந்த ஊர் சாலை ஒன்றில் இறக்கிவிட்டுச் சென்றது ஆம்புலன்ஸ். அடுத்து எங்கே போவதென்றே தெரியாத நிலையில், மதுரை மத்தியச் சிறையின் உயரதிகாரியை ஃபோனில் தொடர்புகொண்டு “இப்ப நான் நடுரோட்ல நிக்கிறேன். நீங்கதானே எனக்கு டிரான்ஸ்ஃபர் போட்டீங்க? எனக்கு ஒரு வழி சொல்லுங்க..” என்று கத்தித் தீர்த்திருக்கிறார். உடனே அந்த மதுரை அதிகாரி, கோயம்புத்தூர் டி.ஐ.ஜி. சண்முகசுந்தரத்திடம் பேச, கிருஷ்ணகிரியிலிருந்து கார் ஏற்பாடு செய்து, சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிறைகளில் பணிபுரிபவர்களே, கரோனா பாதிப்புக்கு ஆளாகும்போது, இத்தனை மோசமான அனுபவங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்றால், மனிதநேயம் எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.