தமிழகத்தையே நிலைகுலையச் செய்திருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு அரபு நாடுகளைப் போல மரண தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் மதுரை ஆதீனம்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம். இந்த வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் அதிமுக அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. யார் குற்றவாளிகளாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிகள், கல்லூரிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், சபல சாமியாரான நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக அறிவித்து, பிறகு பல எதிர்ப்புகளால் வெளியேற்றிய பிரபலமான மதுரை ஆதினம் பொள்ளாச்சி விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், " பாலியல் துன்புறுத்தலை அதிமுக,திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகின்றனர். அதில் எந்தக் கட்சிகளும் கருத்து வேறுபாடு இல்லை. இப்படிப்பட்ட வன்முறை சம்பவங்களை அழித்து ஒழிக்க வேண்டுமானால் அரபுநாடுகளில் நடமுறையில் இருக்கும் சட்டத்தைப்போல இந்திய நாட்டில் அமல்படுத்தப்பட வேண்டும் என 30 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். அதையே நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். இதைத்தவிர வேறு வழியே இல்லை.
பொள்ளாச்சியில் மாணவிகள் இளம்பெண்கள் ஏராளமானோர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உரிய வழிவகைகளையும் துரிதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் . பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ள நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அரபு நாடுகளைப்போல மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்." என்று கூறியிருக்கிறார்.