மதுரை திருமங்கலம் தொகுதி முழுவதும் அமைச்சர் உதயகுமார் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தான் ஜெயிக்க எது வேண்டுமென்றாலும் செய்வார் என்று எதிர்க்கட்சியினர் சொல்லிவந்த நிலையில், தேர்தல் அறிவிக்கும் முன்பே அமைச்சர் களத்தில் இறங்கினார். அவர் முதலில் செய்தது, ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டியதுதான். அதை சிறப்பாக படையலெல்லாம் வைத்து திறந்துவைத்தார்.
கோயில் திறந்த அன்று, அங்கு வந்த பொண்ணுமாரி என்ற பெண் விபத்தில் இறந்ததாக செய்திவந்தது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து அங்கு நடந்த சம்பவங்கள் கொஞ்சம் அதிர்ச்சியைத்தான் தந்தன..
வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள் அதிமுக தொண்டர் பழனிசாமி, அமைச்சர் தன்னை பூத் கமிட்டியில் சேர்க்கவில்லை என்ற விரக்தியில், அம்மா கோயிலில் அம்மா சிலை முன்பு தீக்குளித்து இறந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், இந்த இறப்பில் சந்தேகம் உள்ளது என்று அமமுக வேட்பாளர் ஆதி நாராயணன் திருமங்கலம் ஆர்.டி.ஓ சவுந்தர்யாவிடம் புகார் கொடுத்துள்ளார்.
புகார் கொடுத்த ஆதி நாராயணன் நம்மிடம், “சார் இது முழுக்க முழுக்க சந்தேகமாக இருக்கிறது. தீக்குளித்தவரின் வேட்டி, சட்டை எரியாமல் உடம்பு மட்டும் எப்படி எரிந்தது? அன்று இரவு அமைச்சர் அங்கு வந்துவிட்டு சென்றிருக்கிறார். எதையோ மறைக்கிறார்கள். போலீஸார் இதை தீர விசாரிக்க மறுக்கிறார்கள்” என்றார்.
இந்நிலையில், 28ஆம் தேதி அன்று அதே ஜெயலலிதா கோயில் அருகே, கார் மோதி லட்சுமணன் என்ற அதிமுக தொண்டர் இறந்தார். இதுகுறித்து ஏற்கனவே புகார் கொடுத்த ஆதி நாராயணனை தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம், “சார் இந்த சம்பவத்திற்கு நியாயம் வேண்டும். இது திட்டமிட்டு அமைச்சர் உதயகுமார், தான் மீண்டும் அமைச்சராக வேண்டுமென்று இப்படி செய்வதாக தோன்றுகிறது. அவர் எப்போதும் குறிகேட்கும் அந்த சாமியாரின் யோசனைப்படி, 108 சேவல் நரபலி செய்தும் ஒன்றும் நடக்காமல் எல்லாமே தனக்கு எதிராகவே இருப்பதால், தற்போது மனிதர்களை நரபலி கொடுக்கும் முடிவுக்கு வந்து, தான் கட்டிய ஜெயலலிதா கோயிலில் வைத்தே யாருக்கும் சந்தேகம் வராதபடி விபத்து போல தொடர்ச்சியாக இப்படி நரபலி நடக்கிறதோ என சந்தேகமாக உள்ளது.
ஏற்கனவே பழனிசாமி என்ற பெயருள்ளவரை தேர்ந்தெடுத்து தீக்குளிக்க வைத்தவர், கடந்த 28ஆம் தேதி லட்சுமணன் என்பவரை கார் ஏற்றி இரத்தம் சொட்டச் சொட்ட இரண்டு மணி நேரம் அம்மா சிலையின் காலடியிலேயே போட்டு துடிதுடிக்க வைத்தபின்பு, கடைசியில் உயிர் போயிருக்கிறது. இதுகுறித்து தீர விசாரிக்க வேண்டும் என்று ஆர்.டி.ஓ சவுந்தர்யா மேடத்திடம் ஏற்கனவே புகார் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை. அதனால், மீண்டும் புகார் கொடுத்திருக்கிறேன். அமைச்சருக்கு ஆதரவாக அதிகாரிகளும் போலீஸாரும் நரபலியை விபத்தாக மாற்றுகிறார்கள். அடுத்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று இந்த மாதிரி கொடூரமான அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவேன்” என்றார் ஆவேசமாக.