Skip to main content

இ.பி.எஸ்ஸுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Madras High Court postpones verdict in case against EPS

 

அதிமுகவில் நிகழ்ந்து வந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவிக்கு கொண்டுவரப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்ததையும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் சார்பில் 5 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில் நீதிபதிகள் சகாதேவன் மற்றும் சவிக் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இதனிடையே இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் எடப்பாடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருந்தது. 

 

இந்த நிலையில் ஓ.பி.எஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, சகாதேவன் மற்றும் சவிக் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 7 நாட்களாக நடந்து வந்தது. விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்