தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேக்கமடைந்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். தொடர்ந்து சீரமைப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 16 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே மாநில வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தென்கிழக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இது நாளை வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.