புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் சுமார் 75 கிராமங்களில் பல மாதங்களாக பற்றாக்குறையான, குறைவான மின்சாரத்தால் மின் விளக்குகள், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், டிவி, மின்மோட்டார்கள் எதுவுமே இயங்காமல் அடிக்கடி பழுதாகிவருவதால் அப்பகுதி மக்கள் நிம்மதியாக தூங்கி பல மாதங்களாகிவிட்டது. ஏம்பல் கிராமத்தைச் சுற்றியுள்ள தாணிக்காடு, மதகம், பறையன்காடு, வயலாங்குடி, சிறுகத்தான்குடி உள்ளிட்ட 52 கிராமங்களில் பல மாதங்களாக குறைந்த மின் அழுத்தத்தால் விளக்குகள் கூட எரியாமல் அவதிப்படும் மக்கள் பலமுறை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் முறையிட்டும் பயனில்லை.
புதிய துணை மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தினாலும் அதற்கான எந்தப் பணியும் நடக்காததால் 52 கிராம மக்களும் தூக்கமின்றி தவிக்கின்றனர். புதிய மக்கள் பிரதிநிதிகளிடமும் கோரிக்கை வைத்துக் காத்திருக்கின்றனர். மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்யும்விதமாக மின்சாரம் ஆய்வும் செய்தனர். ஆய்வில் குறைந்த மின் அழுத்தம் வருவதைக் கண்டுபிடித்தனர். ஆனால் அதை சரி செய்யத்தான் முடியவில்லை. மேலும் இதேபோல மீமிசல், கோட்டைப்பட்டினம் பகுதியிலும் பல கிராம மக்கள் குறைந்த மின்சாரத்தால் மின் விளக்குகள் கூட எரியாமல் ஃபேன் ஓடாமல் கொசுக்கடியால் டெங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அதே நேரத்தில் கடற்கரையோரம் உள்ள இறால் பண்ணைகளுக்கு மட்டும் சரியான அளவு மின்சாரம் கிடைக்கிறது.
மின்சாரம் குறைவாக வருவதால்தான் இப்படி குறைவாக கொடுக்கிறோம் என்று இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் இறால் பண்ணைகள் தொடர்ந்து மின் திருட்டில் ஈடுபடுவதாகவும் இதை மின்வாரிய அதிகாரிகள் கண்டும் காணாததுபோல இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அதேபோல அறந்தாங்கி அருகில் உள்ள நாகுடி துணைமின் நிலையத்தில் இருந்து பல கிராமங்களுக்குச் செல்லும் மின்சாரம் குறைந்த அளவே செல்வதால் மின்சாதனப் பொருட்களை இயக்க முடியாமலும் பழுதாகியும் உள்ளன. இதுகுறித்து களக்குடி கிராம இளைஞர்கள் பலமுறை மின்வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், ஞாயிற்றுக்கிழமை மாலை குறைந்த மின்சாரத்தால் இயங்காத டிவி உள்ளிட்ட மின்சாதப் பொருட்களைத் தூக்கிக்கொண்டு மின்வாரிய அலுவலகம் சென்று முற்றுகையிட்டனர்.
இப்படி அறந்தாங்கி தொகுதியில் மட்டும் சுமார் 75 கிராமங்கள்வரை பாதிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் வீட்டுக்குவரும் மன்சாரத்தைத்தான் இறால் பண்ணைக்குத் திருடுகிறார்கள் என்கின்றனர். இந்த மின் பற்றாக்குறையைப் போக்காவிட்டால் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் காட்சிப் பொருளாகவே இருக்கும் என்பதே உண்மை.
.