செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடு பகுதியில் முன்னே சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பத்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த அச்சரப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். மேலும், விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர். அதேபோல், காவல்துறை உயரதிகாரிகளும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, முன்னே இரும்பு லோடை ஏற்றிச் சென்ற லாரியை முந்த முயன்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் பேருந்தில் இடதுபுறம் முழுவதும் சேதமடைந்த நிலையில், அந்த பக்கத்தில் பயணம் செய்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
இந்த விபத்து அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.