சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழுவுருவ சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று (28/05/2022) திறந்து வைத்தார். அதற்கான நிகழ்வு தற்பொழுது துவங்கியுள்ள நிலையில் முதல்வர் முன்னிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலைஞரின் 16 அடி வெண்கல சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், தயாநிதிமாறன், கனிமொழி, ஏ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திமுக தொண்டர்களும் திமுக கொடியுடன் குவிந்திருந்தனர். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோரும் கலந்துகொண்டனர். சிலை திறப்புக்கு பின்னர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின், வெங்கையா நாயுடு ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
ரூபாய் 1.70 கோடி மதிப்பில் 16 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள, கலைஞரின் வெண்கலச் சிலை 12 அடி உயர பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலைக்கு கீழே 'வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
சிலை திறப்பு நிகழ்வை தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் துரைமுருகன், ''தமிழகத்தை தலை நிமிர்த்தியவர், திராவிட இயக்கத்தை 50 ஆண்டுகள் தனது தோளில் சுமந்தவர் கலைஞர். கலைஞரின் சிலையை பார்க்கும் போது நேரிலே பேசுவது போலவே இருக்கிறது. அப்படி தத்ரூபமாக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து கண்ணீர் வடிக்காமல் வெளியே வர முடியவில்லை. இத்தகைய நிலையை உருவாக்கி தந்தவர் முதல்வர் ஸ்டாலின்தான். அவர்தான் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்.ஒரு காலத்தில் அந்த இடம் சாதாரண இடமாக இருந்தது. அதனை சட்டப்பேரவை நடக்கும் இடமாக மாற்றி தந்தவர் கலைஞர்.
ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அந்த இடத்திற்கு வந்து ஒவ்வொரு செங்கல்லாகப் பார்த்து பார்த்து அடுக்கி வைத்தவர். அப்பொழுது நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன். கட்டுகிற வேலை எனக்கு, ஆனால் யோசனை சொல்லி அதனை அழகுபடுத்தியவர் கலைஞர்தான். அவர் கனவு நினைவாகும் நேரத்தில் அதனை ஒரு மாயைக்குள் கொண்டுபோய்விட்டார்கள். ஆனாலும் முடியாததை முடித்து காட்டுவதில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். மு.க.ஸ்டாலினுக்கு நிகர் மு.க.ஸ்டாலின்தான். அசந்து போய்விட்டேன் அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறாயே. எங்கே வைக்க வேண்டும், ஏன் வைக்க வேண்டும். எதற்கு வைக்க வேண்டும். இந்த சிலை அங்கு இருந்தால் என்ன பேச்சு வரும் என நினைத்து அந்த இடத்தை முதல்வர் செலக்ட் செய்துள்ளார். உங்களைவிட நாங்கள் மூத்தவர்களாக இருக்கலாம் ஆனால் உங்கள் அறிவு திறமைக்கு முன்னால் நாங்கள் இளையவர்கள்'' என்றார்.