கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் - திருவண்ணாமலை சாலையில் உள்ளது வடபொன்பரப்பி. இங்குள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் பிரம்மதேசம். இங்குள்ள பள்ளிவாசல் தெருவில் வசித்துவருபவர் 29 வயது நபிஸ். இவர் ரம்ஜான் பண்டிகை முடிந்த மறுநாள் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் கூல்ட்ரிங்ஸ் கடை வைத்துள்ளார்.
நபீஸ் ஊருக்கு செல்லும்போது, தனது வீட்டை அவ்வப்போது வந்து பாதுகாத்துக்கொள்ளும்படி அதே ஊரில் உள்ள அவரது சகோதரியின் கணவர், மைத்துனர் சபிக் என்பவரிடம் கூறியுள்ளார். அவரும் தினந்தோறும் நபிஸ் வீட்டிற்கு வந்து பார்வையிட்டுச் செல்வார். அதன்படி நேற்று (28.05.2021) அந்த வீட்டைப் பார்த்துச் செல்வதற்கு வந்தபோது, அந்த வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டை அடுத்து உள்ள மரக்கதவின் உள் தாழ்பாள் பூட்டு உடைந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் போலீசாருக்குத் தகவல் அளித்தார். அதையடுத்து வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசார் வீட்டை சோதனையிட்டனர். அதில், மர்ம ஆசாமிகள் கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகை, சவுதி ரியால் பணம் ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் ஆகிவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவுசெய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்துகொண்ட கொள்ளையர்கள் இரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சுமார் 7 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் அயல்நாட்டு பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.