Skip to main content

உள்கட்சி பிரச்னைக்காக உள்ளாட்சி அமைப்புகளை முடக்கும் முயற்சிக்கு இடமளிக்க கூடாது:ஸ்டாலின்

Published on 05/09/2017 | Edited on 05/09/2017

உள்கட்சி பிரச்னைக்காக  உள்ளாட்சி அமைப்புகளை முடக்கும் 
முயற்சிக்கு மாநில தேர்தல் ஆணையம்
 இடமளிக்க கூடாது:ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை:

“செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, நவம்பர் 17 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்”, என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தலைமையிலான அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். உள்ளாட்சி ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உயர்நீதிமன்றத்தின் இந்த மிக முக்கியமான தீர்ப்பு  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசின் அடாவடிப் போக்கிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது.
 
சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று, அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு, 26 ஆம் தேதியே ஆளும் அதிமுகவினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, மற்ற கட்சிகளுக்குத் தேர்தல் அறிவிக்கை 27 ஆம் தேதி கிடைக்கும் விதத்தில், ஒரு அராஜகமான தேர்தல் நடைமுறையை, ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒருதலைப்பட்சமான தேர்தல் நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்தது. அதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த வழக்கில், 04.10.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அவர்கள் தீர்ப்பளித்தார். அதில், “31.12.2016 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்”, என்று உத்தரவிட்டார். ஆனால், அந்தத் தீர்ப்பை மதிக்காமல் மேல்முறையீடு செய்தது ஜனநாயக விரோத அதிமுக அரசு. அதையும் நிராகரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், “14.5.2017க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்”, என்று மீண்டும் தீர்ப்பளித்தது.
 
ஆனாலும், உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், ‘குதிரை பேர’ அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், தொடர்ந்து தாமதம் செய்து. உள்கட்சி பிரச்னைக்காக, உள்ளாட்சி ஜனநாயகத்தைப் படுகொலை செய்தது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஐந்து வருடம். அந்த ஐந்து வருடம் முடியும் முன்பே தேர்தல்களை நடத்தி முடித்திட வேண்டும் என்பதுதான் அரசியல் சட்டம். அதன்படி கடந்த 24.10.2016 ஆம் தேதிக்கு முன்பாகவே உள்ளாட்சித் தேர்தலை இந்த அரசு நடத்தி முடித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வருடம் முடிந்த பிறகும், இருமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க சட்டம் கொண்டு வந்த ‘குதிரை பேர’ அரசு, இரட்டை இலை முடக்கப்பட்டதாலும், அதிமுக என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வரவில்லை.
 
உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையைப் பயன்படுத்தி ஏகோபோக அராஜகத்திற்கும், ஊழலுக்கும் அதிகாரிகளை உடந்தையாக்க, உள்ளாட்சித்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ இந்தத் தேர்தல் நடத்துவது பற்றி அக்கறை காட்டவில்லை. அதற்கு மாறாக திடீரென்று, ‘உள்ளாட்சித் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்’, ஒன்றை அவசரமாக அமைத்து, உள்ளாட்சித் தேர்தலை மேலும் தாமதம் செய்ய, புதிதாக ஒரு காரணம் தேடினார்கள். பொறுப்புள்ள எதிர்கட்சியாக இதை திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தில் எதிர்த்துள்ளது. வெளிநடப்பும் செய்துள்ளது.
 
ஆனால், அதிமுக அரசின் ஜனநாயக விரோதப்போக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் அணுகியது. “வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது, வினாயகர் சதுர்த்தி வருகிறது, கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற பஞ்சாயத்துகளிடமிருந்து, ‘குடிநீர் கிடைக்கவில்லை என்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வந்திருக்கிறது’, ஆகவே இதுபோன்ற நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது”, என்று உயர்நீதிமன்றத்திடம் வம்படியாக முறையிட்டு, மீண்டும் உள்ளாட்சி ஜனநாயகத்திற்கு உலை வைக்க முற்பட்டார்கள்.
 
“அரசு விழாக்கள் கொண்டாடப்படுகிறது. முக்கிய தினங்களை அரசு விழாவாக அணுசரிப்பது எவ்விதத் தடையும் இன்றி நடக்கிறதே”, என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு ‘குதிரை பேர’ அரசு சொன்ன அந்தக் காரணங்களை நிராகரித்து, “உள்ளாட்சி தேர்தலை வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்துள்ளது. “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டியதில்லை”, என்று இதே வழக்கில் முன்பு வாதிட்ட ‘குதிரை பேர’ அரசு, தேர்தலை நடத்தாமல் இருக்க, கடைசி நேரத்தில், “2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் நடத்துகிறோம்”, என்று ஒரு புதிய அவசரச் சட்டத்தை பிறப்பித்து, அதை உயர்நீதிமன்றத்தில் காட்டி, “தொகுதி மறுசீரமைப்பு செய்ய 2017-டிசம்பர் மாதம் கடைசி வாரம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்”, என்றும் கேட்டது. “அதையும் கொடுக்க முடியாது”, என்று நிராகரித்து, ஜனநாயக ரீதியிலான தேர்தலுக்கு வித்திட்டுள்ளது உயர்நீதிமன்றம். எனவே, உள்ளாட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டும் விதத்தில் வழங்கப்பட்டுள்ள, இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை இனியும் காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
வறட்சி, குடிநீர் பிரச்னை போன்ற அனைத்திற்குமே உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகம் இருந்தால் தான் தீவிரமாக நடவடிக்கை எடுத்து, மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். ஏற்கனவே மாநிலத்தில் உள்ள ‘குதிரை பேர’ அரசு நிலை தடுமாறி, அரசு நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துள்ள இந்தநேரத்தில், உள்ளாட்சி அமைப்புகளாவது கிராமங்களிலும், நகரங்களிலும், மாநகரங்களிலும் மக்களுக்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆகவே, வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். உள்ளாட்சி ஜனநாயகத்தை மேலும் முடக்கும் ‘குதிரை பேர’ அரசின் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இடமளிக்காமல், உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’

சார்ந்த செய்திகள்