கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் வதிஸ்டபுரம் பகுதியில் உள்ளது செல்வ விநாயகர் கோவில். இந்தக் கோவில் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. அதனால் இந்த வழியாக வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வ விநாயகரை வழிபட்ட பிறகே புறப்பட்டுச் செல்வார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள பக்தர்கள் தினசரி வந்து வழிபடுவார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் (16.10.2021) இரவு வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலின் பூசாரி பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
நேற்று காலை வாகன ஓட்டிகள் விநாயகரை வழிபட்டு தங்கள் பணிக்குப் புறப்படுவதற்கு சென்றபோது கோவில் முன்புறம் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த அப்பகுதி கோயில் முக்கியஸ்தர்கள், நிர்வாகத்தினர் திட்டக்குடி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். இதனை வழக்குப் பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சமீபத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் விநாயகரை வணங்கிவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தியிருந்ததாகவும் இதனால் அதிக அளவில் உண்டியலில் பணம் இருந்திருக்கலாம். மேலும் உண்டியலை திறந்து பல மாதங்கள் ஆவதாகவும் முக்கியஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகின்றனர். மாநில நெடுஞ்சாலை, இருபத்து நான்கு மணி நேரமும் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து உள்ள பகுதியில் இருக்கும் கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துள்ள சம்பவம் திட்டக்குடி நகர மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.