வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி இடம்பெயர்ந்து முதல் சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு கோவில் அடைக்கப்பட்ட நிலையில் 1:40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அலங்கரிக்கப்பட்ட சொர்க்கவாசலில் எழுந்தருளினார். விஐபி தரிசனம் மூலம் முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையானை வழிபட்டு தரிசித்து வருகின்றனர். காலை ஆறு மணி முதல் இலவச தரிசனம் மூலம் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்று வருவதால், திருச்சியில் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.