தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, இன்றும் தொடர்கிறது. தேர்தல் முடிவுகளும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தில் அதிமுகவை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஒட்டப்பிடாரம் ஒன்றியம் 13- வது வார்டு கவுன்சிலராக கணவர் அரிச்சந்திரன் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் ஒன்றியம் கீழமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக அரிச்சந்திரனின் மனைவி ஜெயக்கனி வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் திருவாரூர் ஒன்றியம் 9- வது வார்டில் கணவர் மணிகண்டன் வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் ஒன்றியம் ஊராட்சி மன்றத் தலைவராக மணிகண்டனின் மனைவி மலரும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் 10- வது மாவட்ட கவுன்சிலராக கணவர் வாசுதேவன் (திமுக) வெற்றி. கமுதி ஒன்றியம் மறக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக மனைவி லட்சுமியும் வெற்றி பெற்றார்.