ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் சில இடங்களில் நிறுத்தப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, நேற்று மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அதில் சில இடங்களில், தேர்தல் நடைமுறை நடந்துகொண்டிருக்கும் போதே நிறுத்தப்பட்டது.
![local body election dmk party chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/CnWdTGTM9FCt_npbNb7iSykI2iZCXW6WFJwi4s7aX5w/1578913321/sites/default/files/inline-images/Chennai_High_Court33333_16.jpg)
இந்நிலையில், திமுக வெற்றி பெறும் நிலையில் இருந்த கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு முறையீடு செய்தார்.
அதை ஏற்ற நீதிபதி, சேலம், கரூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்யக் கோரிய திமுக-வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே தொடர்ந்துள்ள வழக்கில், கூடுதல் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளார்.