திண்டுக்கல் அருகே திமுக வேட்பாளர் சின்னத்தை கூறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கே.சி.பட்டி, காவனூர் தாண்டிக்குடி, பெரியோர் மங்களம்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று 30ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் நேற்று முன்தினம் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது மங்களம்கொம்பு கிராமத்திற்கு உட்பட்ட காமன் ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் சிவகாமி என்பவர் சுயேச்சை சின்னமான ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார் இவரை எதிர்த்து திமுக சார்பில் மனோரஞ்சிதம் பூட்டு சாவி சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதில் அதிமுக வேட்பாளருக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளரின் சின்னமான பூட்டு சாவிக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர் மற்றும் அதிமுகவினர் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அருகே இருந்தவர்கள் அமைச்சரிடம் எடுத்துக் கூறியவுடன் தவறை திருத்திக் கொண்ட அமைச்சர் அதன்பின் அதிமுக வேட்பாளருக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார். இந்த உள்ளாட்சித் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அமைச்சர் சீனிவாசனுடன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ் உள்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.