சேலம் ஒன்றியக்குழு கவுன்சில் 8- வது வார்டு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்று, 40 ஆண்டுகால அ.தி.மு.க. கோட்டையைத் தகர்க்குமா என்ற பரபரப்பு எகிறியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு, ஜூலை 9- ஆம் தேதி (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. வரும் ஜூலை 12- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மாவட்ட கவுன்சிலர் 1, ஒன்றியக்குழு கவுன்சிலர் 20, ஊராட்சி மன்றத் தலைவர் 40, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 436 இடங்கள் உள்பட மொத்தம் 510 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இவற்றில், 34 பதவிகளுக்கு கட்சி சின்னங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, சேலம் ஊராட்சி ஒன்றியக்குழுவில் காலியாக உள்ள 8- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தால், உள்ளாட்சி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துவிட்டது.
எனினும், 8- வது வார்டில் அ.தி.மு.க.வின் ஆண்டிப்பட்டி கிளை செயலாளர் வெங்கடேஷ்வரன், சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்த வார்டுக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி, இனாம் வேடுகாத்தாம்பட்டி கிராமங்களில், 'எம்.ஜி.ஆர், ஜெ., ஆசி பெற்ற தென்னை மரம் சின்னம்' என்றே சுவர் விளம்பரம் செய்துள்ளார் வெங்கடேஷ்வரன்.
பரப்புரை களத்தில் அ.தி.மு.க. துண்டு, கொடியை தாராளமாக பயன்படுத்தி வரும் வெங்கடேஷ்வரனுக்கு, எந்த இடத்திலும் எடப்பாடி பழனிசாமி படத்தை பயன்படுத்தக் கூடாது என 'செல்லமான' அட்வைஸ் தரப்பட்டதாகவும் சொல்கின்றனர்.
இவரை எதிர்த்து, தி.மு.க. தரப்பில் ஆண்டிப்பட்டி கிளை செயலாளர் முருகன் களமிறக்கப்பட்டு உள்ளார். சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், பார்த்திபன் எம்.பி., ஒன்றிய பொறுப்பாளர்கள் முருகனுக்கு ஆதரவாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தவிர, மேலும் 14 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஆனாலும் அவர்கள் தேர்தல் களத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெங்கடேஷ்வரனுக்கும், முருகனுக்கும் இடையில்தான் நேரடி போட்டி நிலவுகிறது.
தி.மு.க.வின் முருகனும், சுயேச்சை வெங்கடேஷ்வரனும் பங்காளிகள். உள்ளூரில் செல்வாக்கு பெற்ற, 'வேடிச்சி வகையறா' குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வெள்ளி கொலுசு உற்பத்திதான் இருவருக்கும் தொழில். இருவருமே பள்ளிப்படிப்பை தாண்டாதவர்கள். இருவரின் வெற்றி வாய்ப்பு குறித்து 8- வது வார்டு வாக்காளர்கள், தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசினோம்.
'ஆளுங்கட்சி பலம், உதயசூரியன் சின்னம் ஆகியவை எல்லாம் தி.மு.க. வேட்பாளர் முருகனுக்கு பெரிய அளவில் பக்கபலமாக உள்ளன. எங்கும் எப்போதும் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்து வருகிறார். பெரிய அளவில் பண பலமும் உள்ளனர்.
இதே மண்ணின் மைந்தரும், சுயேச்சை வெங்கடேஷ்வரன், தி.மு.க. வேட்பாளர் முருகன் ஆகியோரின் நெருங்கிய உறவுக்காரருமான அயோத்தியாபட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமாருக்கு இந்த வார்டில் செல்வாக்கு அதிகம். அவரை, கட்சித் தலைமை தேர்தல் வேலைகளில் இறக்கி விட்டுள்ளது, முருகனுக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. சுத்தி சுத்தி அவருடைய குடும்ப உறவுகள், பங்காளிகள் இருந்தாலும் அவர்களின் வீடுகளில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் முருகன் அவ்வளவாக கலந்து கொள்வதில்லை என்ற சிறிய மைனஸூம் இருக்கிறது.
இடைத்தேர்தல் நடக்கும் 8- வது வார்டில், கடந்த 40 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை தவிர மற்ற காலங்களில் அதிமுகதான் ஜெயித்து வந்திருக்கிறது. சுயேச்சை வெங்கடேஷ்வரன், சேலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வையாபுரியின் தீவிர ஆதரவாளர். இவருக்கு வையாபுரி மூலமே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் நிழலான இளங்கோவனுக்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவி வழங்கப்பட்டதை கண்டித்து, தாறுமாறாக விமர்சனம் செய்திருந்தார் வையாபுரி. அவர் மீதான கடுப்பில் வெங்கடேஷ்வரனுக்கு எதிராக இலை கட்சியில் பலர் உள்ளடி வேலைகளில் இறங்கியுள்ளனர். வையாபுரி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகளே வெங்கடேஷ்வரனை ஆதரித்து வாக்கு சேகரிக்க வரவில்லை.
வேட்பாளர் மட்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைச் சொல்லி சொந்த பந்தங்களை திரட்டி 'மாஸ்' காட்டி வருகிறார். உறவுக்காரர்களின் பலத்த ஆதரவு இருந்தாலும், வெங்கடேஷ்வரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது பெரிய சறுக்கல்தான் என்கிறார்கள்,'' என்கிறார்கள் ர.ர.,க்களும் உ.பி.,க்களும்.
மொத்தம் 10 கவுன்சிலர்களைக் கொண்ட சேலம் ஒன்றியமானது, காலம்காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2019- ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 5, தி.மு.க. 4, இ.கம்யூ., 1 இடத்திலும் வெற்றி பெற்றது. கம்யூ., ஆதரவுடன் அ.தி.மு.க.வின் சேலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வையாபுரியின் மனைவி மல்லிகா, சேலம் ஒன்றியக்குழுத் தலைவரானார்.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்பட்சத்தில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் சேலம் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றிவிட முடியும் என கணக்குப்போட்டு, உடன்பிறப்புகள் தீயாய் வேலை செய்து வருகின்றனர். சுயேச்சை வெங்கடேஷ்வரன் தரப்பில் ஓட்டுக்கு 500 ரூபாயும், தி.மு.க. தரப்பில் 1000 ரூபாயும் பட்டுவாடா செய்து வருகின்றனர். மொத்தம் உள்ள 7,600 வாக்குகளில், 80 சதவீத வாக்காளர்களுக்கு இருதரப்பினருமே பட்டுவாடாவை முடித்துவிட்டனர்.
வாக்குப்பதிவுக்கு முதல் நாள், இரவோடு இரவாக ஆளுங்கட்சி தரப்பில் வேட்டி, சேலைகளும், மளிகை பொருள்களுக்கான டோக்கனும் வாக்காளர்களுக்கு சப்ளை செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் வார்டு முழுக்க பரவிக் கிடக்கிறது. இரண்டாவது ரவுண்டும் வாக்காளர்கள் குளிர்விக்கப்பட்டால், தி.மு.க. வெற்றி பெற்று புதிய வரலாறு படைக்கும் என்கிறார்கள்.
''பணப்பட்டுவாடா வெளிப்படையாகவே நடக்கிறது. ஆளுங்கட்சியினர் முதியோர் ஓய்வூதியத்தொகை படிவத்தை பூர்த்தி செய்து தருகின்றனர். இதுபோன்ற தேர்தல் விதிமீறல்கள் அப்பட்டமாக நடந்தாலும் கூட, தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவே இல்லை,'' என புலம்புகிறார்கள் இதர சுயேச்சை வேட்பாளர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு இன்னும் 1000 ரூபாய் தரப்படாதது, வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தராதது ஆகியவற்றைக் கூறி வாக்கு சேகரித்து வருவதாக வெங்கடேஷ்வரன் சொன்னார்.
பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிப்பதாக முருகன் கூறினார்.
அ.தி.மு.க.வின் கோட்டையை தகர்த்து ஆளுங்கட்சி புதிய வரலாறு படைக்குமா? அல்லது சுயேச்சை மூலமாக வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க.வே வார்டை தக்க வைக்குமா? என்பது ஜூலை 12- ல் தெரிய வரும்.