தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம் பெற்றிருந்த புளியில் பல்லி இருந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்தவரின் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் உணவுக்கு தேவையான 21 பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக சிலர் புகார் தெரிவித்திருந்தனர். அப்படி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த நந்தன் என்பவர் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி இருந்ததாக புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இதனால் அவதூறு பரப்பியதாக நந்தன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (11/01/2022) மாலை 05.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி "பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தம் கோரப்பட்டே கொள்முதல் நடைபெற்றது. அ.தி.மு.க. ஆட்சி முழுவதும் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் என ஊழலில் திளைத்தது.
பொங்கல் பரிசு வழங்குவதில் அ.தி.மு.க. ஆட்சியில்தான் ஊழல் நிறைந்திருந்தது. ஆளும் அரசை குறைக்கூறும் நோக்கத்திலேயே ஓ.பி.எஸ். தவறான கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். 2011- ஆம் ஆண்டு வரை வழங்கி வந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை 2012- ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. அரசு நிறுத்தியது. கடுமையான நிதி நெருக்கடியிலும் கூட கரோனா நிவாரண நிதியையும், நிவாரண பொருட்களையும் தி.மு.க. அரசு வழங்கியது. தி.மு.க. அரசு வழங்கிய பொங்கல் பரிசைப் பெற்ற அனைவரும் தரமானதாக உள்ளதாக பாராட்டுகிறார்கள். அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் தற்போது தரமான பொங்கல் பரிசு வழங்குவதை குறை சொல்கிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புளியில் பல்லி இருந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்த தந்தை நந்தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் மன உளைச்சல் அடைந்திருந்த அவரது மகன் குப்புசாமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.