டாஸ்மாக் கடைகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று திண்டுக்கல் சரக போலீஸ் டிஐஜி முத்துச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் மேரி மாதா கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி முத்துசாமி தலைமை தாங்கினார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் முன்னிலை வகித்தார். பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துகுமார் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்துகொண்டு விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி பேசும் போது, 18 வயதுக்கு உட்பட்ட இளம் குற்றவாளிகளை போலீசார் அன்போடு நடத்த வேண்டும். அவர்கள் கோர்ட்டுக்கு அழைத்து செல்வதற்கு முன்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறார் எனவே அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்குவதுடன் குற்றவாளிகளாக பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்க்கும் போது சமுதாயம் அவர்களை குற்றவாளியாக பார்க்கும்.மேலும் டாஸ்மாக் கடைகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டாயம் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கக்கூடாது. அவர்களுக்கு மதுபானம் வழங்கப்படமாட்டாது என்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை அவசியம் வைக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அப்துல் காதர், மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி வெங்கடேசன், முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரம், கல்லூரி முதல்வர் ஐசக் மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது குழந்தைகள் மீதான வன்முறையை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் நன்றி கூறினார்.