கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக அனைத்து வகையான வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அதுபோல் அரசு மதுபானக் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர் ரயில் மூலம் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபான பாட்டில்களை வாங்கி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அந்தவகையில், மைசூர் தூத்துக்குடி விரைவு ரயிலில் மதுபானப் பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு ரயில்நிலையம் வந்த மைசூர் தூத்துக்குடி விரைவு ரயிலில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த சோதனையில் நான்கு பேர் மதுபான பாட்டில்களை தங்களது கைப்பைகளில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நால்வரையும் ஈரோடு ரயில்வே காவல்நிலையம் அழைத்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கர்நாடக மாநிலம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் கொண்டு வந்த 22 லிட்டர் கொள்ளளவு கொண்ட மதுபான பாட்டில்களையும், மதுரையைச் சேர்ந்த மணி, பரமசிவம் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரிடமிருந்து 72 லிட்டர் கொள்ளளவு கொண்ட மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இவர்களிடமிருந்து 94 லிட்டர் கொள்ளளவு கொண்ட 550 பாட்டில்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு மதுபான பாட்டில்களைக் கடத்தி வந்த நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மைசூர் தூத்துக்குடி விரைவு ரயிலில் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபானங்கள் கடத்தி வருவது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.