தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசுகையில், ''மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னிடமோ அல்லது எங்கள் துறை அதிகாரிகளிடமோ கேட்டு அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் அதிமுகவாக இருக்கட்டும், பிஜேபியாக இருக்கட்டும் சமூக வலைத்தளங்களில் அரசின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் அவதூறு செய்திகளைத்தான் பரப்பிக்கொண்டு வருகிறார்கள். ஆதார் எண் இல்லை என்றாலும் கட்டணம் செலுத்தலாம். ஆதார் கொடுப்பது நல்லது.
மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக அவசியம் இணைக்க வேண்டும். இதற்கான அவகாசங்கள் கொடுக்கப்பட்டு தமிழக முதல்வரின் அனுமதி பெற்று சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்காகவும் சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெற இருக்கிறது. அந்த முகாம்களையும் மின் இணைப்பு பெற்ற பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக 100% ஆதார் எண்ணை மின் கணக்குடன் இணைப்பது அவசியம்.
கண்டிப்பாக ஆதார் இணைத்தால்தான் மின்சாரத் துறையை சீர்திருத்தம் செய்து ஒரு புதிய பயணத்தோடு மின்சாரத் துறையை மேம்படுத்த முடியும். கடந்த அதிமுக ஆட்சியில் போடாத சாலைகளை தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாமே தவிர குற்றச்சாட்டு கூற அதிமுகவிற்கு தகுதி இல்லை.'' என்றார்.