கத்தி திரைப்படத்தின் முதல் காட்சியில் கைதியாக கதிரேசன் கேரக்டரில் நடித்த விஜய், சிறைக் காவலர்களை ஏமாற்றி சிறையிலிருந்து எளிதில் தப்பிவிடுவார். மதுரை மத்திய சிறையிலிருந்து, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஆதியும்கூட, சிறைக் காவலர் பழனிக்குமாருக்கு போக்கு காட்டிவிட்டு, சுலபமாகத் தப்பிவிட்டார். எப்படி தெரியுமா?
மதுரை மத்திய சிறையில், தண்டனை சிறைவாசிகள் 680 பேர், விசாரணை சிறைவாசிகள் 842 பேர், நீதிமன்ற விசாரணையில் உள்ள சிறைவாசிகள் 166 பேர், தடுப்புக்காவல் சிறைவாசிகள் 299 பேர் என மொத்தம் 1987 சிறைவாசிகள் இருக்கின்றனர்.
டி.ஐ.ஜி. பழனி வசிக்கும் பங்களாவில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டும் வேலையையும்கூட தண்டனை சிறைவாசிகளே பார்த்து வருகின்றனர். இந்நிலையில், 16-ஆம் தேதி காலை 6 மணியளவில் தண்டனை சிறைவாசிகள் 10 பேரை, தோட்ட வேலை பார்ப்பதற்காக டி.ஐ.ஜி. பங்களாவுக்கு சிறைக்காவலர் (GR1 Warder) பழனிக்குமார் எடுத்துச் சென்றார். அவர்களில் ஒருவரான ஆயுள் தண்டனைக் கைதி ஆதி, தான் அணிந்திருந்த வெள்ளை உடையைக் கழற்றி எறிந்துவிட்டு, சிறை நர்சரி கார்டனில் இருந்த டி-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு தப்பித்துவிட, சிறைக் காவலர் பழனிக்குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆதி தப்பித்துச் செல்வதற்குமுன், தண்டனைச் சிறைவாசி செல்லையாவின் தங்கை முத்துமாரி மூலம், தன்னுடைய பணம் ரூ.20,000, செல்லையாவின் பணம் ரூ.20,000 என மொத்தம் ரூ.40,000-ஐ, Prisioner cash book சிறைக்காவலர் முகமது கனியிடமிருந்து கையெழுத்துப் போட்டு வாங்கச் செய்து, தனது பணம் ரூ.20,000-ஐ சிறைக்கு வெளியே முத்துமாரியிடமிருந்து பெற்றுக்கொண்டதும் நடந்துள்ளது.
‘சிறையில் தண்டனைச் சிறைவாசிகள், அவர்களது தண்டனையில் ஒரு குறிப்பிட்ட கால அளவு தண்டனையை முடித்தால்தான், வெளிக்குழு (out gang) பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக ஆதி இருந்தும், மதுரை மத்திய சிறைக்கு வந்து 7 மாதங்கள்கூட முடியாத நிலையில், நடைமுறையில் இல்லாத வகையில் எப்படி வெளிக்குழு பணிக்கு, யாருடைய உத்தரவில் அனுப்பி வைக்கப்பட்டார்?’ எனக் கேள்வி எழ, மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) வசந்த கண்ணனைத் தொடர்புகொண்டோம்.
“ஒரு சிறைவாசி ஜெயில்ல இருந்து வெளியேபோக எப்போதெல்லாம் அனுமதிக்கப்படுகிறார்? அவரோட எமர்ஜென்ஸி, அல்லது சாதாரண விடுமுறைல போகலாம். அவுட் கேங் பணிக்காக அனுப்பலாம். ஓபன்-ஏர் ஜெயில்ல விவசாய நிலம் இருக்கு, அங்கு வேலை செய்யவும் அனுப்பலாம். மதுரை மத்திய சிறைக்கு ரெண்டு இடத்துல தோட்டம் இருக்கு. பரேட் கிரவுண்ட் பக்கதுல ஒரு தோட்டம். டி.ஐ.ஜி. வீட்டு பக்கத்துல ஒரு தோட்டம். அங்கே விவசாயப் பண்ணையே இருக்கு.
ரிமான்ட் காலத்தையும் சேர்த்து ஒரு சிறைவாசி மூணு வருஷத்துக்கு மேல அனுபவிச்சிருந்தா, அவங்கள வெளிக்குழு பணிக்கு அனுப்பலாம். ரிமான்ட் நாட்களையும் சேர்த்து 1000 நாட்களுக்கு மேல் சிறைவாசி ஆதி அனுபவிச்சிருக்காரு. ரூல்படிதான் அவரை வெளிக்குழு பணிக்கு அனுப்பி வச்சிருக்கோம். ரெகார்ட் எல்லாம் பக்காவா இருக்கு. நடைமுறைல இல்லாத எதையும் பண்ணல.
ஜெயில்ங்கிறது 3000 பேர் இருக்கிற ஒரு குடும்பம் மாதிரி. அந்த 3000 பேருக்கும் வீட்டுல நல்லது-கெட்டது, வரவு-செலவு எல்லாத்துக்கும் காவலர்களை நியமிக்கிறோம். மதுரை மத்திய சிறையில் இருக்கிற காவலர்களோட எண்ணிக்கை 180. அவங்கள, உள்ளே, வெளியேன்னு ரெண்டு வேலைக்கும் பயன்படுத்துறோம். ஒரு நேரத்துல ஒரு ஷிப்டுக்கு 25 பேர். ஒரு நாளைக்கு 75 பேர். 8 மணி நேர ஷிப்டா கவர்மென்ட் மாத்திருச்சு. 8 மணி நேரத்துக்கு ஒரு ஷிப்டுன்னு மாறிக்கிட்டே இருப்பாங்க. இப்படியொரு சிக்கலான சூழ்நிலைல குறிப்பிட்ட ஒரு சிறைவாசியை மட்டும் எப்படி பார்த்துக்க முடியும்?
சிறைக்காவலர் பழனிக்குமார், ரெண்டு சிறைவாசிய கேட்ல கையெழுத்து போட்டு கூட்டிட்டுப் போறாரு. சிசிடிவி ஃபுட்டேஜ் அப்படியே இருக்கு. வெளிய கூட்டிட்டு வந்து, சரி நீங்க பணத்த வாங்கிட்டு நேரா அங்க வந்திருங்க, நான் சாப்பாடு வாங்கப் போறேன்னு விட்டுட்டுப் போறாரு. இது யாரோட தவறு? மேனுவல்படி ரெண்டு சிறைவாசிய முறையா எடுத்துட்டுப் போயி, அவங்கள கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய இடத்துல யாருகிட்ட ஒப்படைச்சாரு? எல்லாம், அந்தக் காவலர் அந்தச் சிறைவாசிய நம்புனதுனால வந்த வினை. சிறைக்காவலர் பழனிக்குமார், பொறுப்பா ஒரு காவலர்கிட்ட சிறைவாசியை ஒப்படைச்சு கையெழுத்து வாங்கியிருந்தா, அவரு சஸ்பென்ட் ஆகிருக்க மாட்டாரு. சிறைவாசியும் தப்பிச்சிருக்க முடியாது” என்றார்.
மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் என்னதான் விளக்கம் அளித்தாலும், கைதியைத் தப்பிக்கவிட்ட விவகாரம் ஒரு கரும்புள்ளிதான்!