Skip to main content

‘மக்கள் உயிரே முக்கியம்! அரசு வருவாய் அல்ல!’ -டாஸ்மாக் திறப்பதற்கு தடைகோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் பளிச்!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
 Life is important to people! Government is not revenue!- High court

 

தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்குத் தடைகோரி தொடரப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி,  நீதிபதி வினீத் கோத்தாரி,  நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆகியோர் அமர்வில் காணொலிக் காட்சியில் விசாரணைக்கு வந்தபோது,  நீதிமன்ற கூட்ட அரங்கில் நீதிபதிகள் விசாரித்தனர். அனைத்து வழக்கறிஞர்களும் அவரவர் வீடு மற்றும் அலுவலகங்களிலிருந்து ஆஜரானார்கள்.


வாதங்களின்போது -

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், மது பழக்கம் ஒரு கொடிய நோய்.  ஏழை, எளிய மக்கள், தங்களின் வருமானத்தில் அடிப்படை வசதிகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் மதுபானக் கடைகளுக்கு செலவழிப்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.   ஊரடங்கு காலத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிக்கின்றன.  தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க டாஸ்மாக் முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படவில்லை.  ஊரடங்கு முடியும் வரை மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என வாதிட்டனர்.

அதேசமயம், டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான நடைமுறைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 500 டோக்கன்  என்ற நடைமுறையை பின்பற்ற உள்ளதாகவும், மதுபான விற்பனை நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களே பின்பற்றப்படுகின்றன என்றும் தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

 

 


ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்குத் தேவையான மென்பொருள் மற்றும் செயலியை வழங்கத் தயாராக இருப்பதாக ஹிப் பார் என்ற நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பல்வேறு கருத்துகளை தெரிவித்ததுடன், டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி, அரசு தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை  மே 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்தவை -

தமிழகத்தில் 5 ஆண்டுகள் மதுவிலக்கு அமலில் இருந்த நிலையில், தற்போது ஏன் அமல்படுத்த முடியவில்லை? அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக இருக்கும் நீதிமன்றம், பொது அமைதியும், சட்ட ஒழுங்கும் சீர்குலைந்தால் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது.

 


டாஸ்மாக் பதில் மனுவில்,  12 கடைகளில் மட்டும்தான் பிரச்சனை எழுந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 170 கோடி ரூபாய் வசூல் எப்படி வந்தது? மக்கள் உயிர்தான் முக்கியமே தவிர, வருமானம் அல்ல. ஒரு அரசின் முக்கிய நோக்கம் மக்கள் நலனா? அரசின் வருவாயா??

 

 

 

 Life is important to people! Government is not revenue!- High court


மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே வழக்கு நடைபெற்றபோது, நாட்டில் இருந்த மக்கள் அனைவரும் கோட்சேவிற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியதை குறிப்பிட்டு, அவருக்காக ஆஜரான வழக்கறிஞர் நிலையை போல் அரசு தலைமை வழக்கறிஞரின் நிலைமை உள்ளது.

மதுவின் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தவறும்போது,  அரசியல் சாசனத்தின்  காப்பாளராக இருக்கும் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டிய நிலை ஏற்படும். மதுக்கடைகள் திறப்பதால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். ஆனால்,  அதையும் தாண்டி பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்பதை தற்போதைய செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.


சாதாரண சிறிய கிராமங்களில் கூட 400, 500 பேர் மதுக்கடைகள் முன்பு குவிந்து நிற்கின்றனர். இதனால் பொது அமைதியோடு, குடும்ப அமைதியும் பாதிக்கப்படும் அதை எப்படி அரசு தடுக்கப் போகிறது?  இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில்  சில தளர்வுகள் வேண்டுமென அரசு கேட்கிறது. வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர்கள் பலர் ஊரடங்கு அமலில் உள்ளவரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வாதிட்டனர். ஆனால் நாங்கள்,  அதற்கு மேலும் மதுக்கடைகள் திறப்பதற்கு தடைவிதிக்க வேண்டுமா என சிந்தித்து வருகிறோம்.

பூரண மதுவிலக்கை நாங்கள் தீர்ப்பாக வழங்கமுடியாது என்றாலும், மதுவின் பயன்பாட்டை கட்டுப்படுத்த தேவையான நிபந்தனைகளை நீதிமன்றத்தால் விதிக்க முடியும். முழுமையான மதுவிலக்கை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. மனுதாரர்களும் அக்கோரிக்கையை எழுப்பவில்லை. ஊரடங்கு வரைதான் மூட சொல்கிறார்கள். தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க மிகுந்த ஆர்வத்தோடு உள்ளோம். இதனை மனதில் கொண்டு தேவையான அனைத்து விளக்கங்களுடன் அரசு வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்த பிறகு,  வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்தின் பெரும் பிரச்சனையாக இருக்கும் டாஸ்மாக் வழக்கு சரியான நீதிபதியின் கையில் தற்போது உள்ளது என்பதை உணர முடிகிறது.  இந்த வழக்கில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை 3 நீதிபதிகளும் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்