Skip to main content

சிவன் கோவிலில் நூலகம்- 108 புத்தகங்கள் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்

Published on 07/08/2024 | Edited on 07/08/2024
 Library in Shiva temple- 108 books provided by Govt school teacher


மன அமைதிக்காக ஆலயம் வரும் பக்தர்களின் மன அழுத்தம், மனக் கவலையை போக்கி மன நிம்மதியையும், அறிவையும் கொடுக்கும் புத்தகங்களை வாசிக்க கொடுக்கிறது தலைமைப் புலவர் நக்கீரர் சிலையோடு பிரமாண்ட சிவன் சிலை கொண்ட மெய்நின்ற நாத சுவாமி ஆலயம். இளைய தலைமுறை செல்போனில் படிப்பதால் கண் பாதிக்கப்படும் அதனால் எந்த பாதிப்பும் வராத புத்தகங்களை படிக்க வேண்டும் என்கிறார் நூலகம் தொடங்கிய கோயில் குருக்கள். கோவிலில் நூலகம் என்பதை அறிந்த அரசுப் பள்ளி ஆசிரியர் 108 புத்தகங்களை கோயில் நூலகத்திற்கு வழங்கியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்கள் ஏராளம் அதில் ஒன்று தான் கீரமங்கலத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் சுவாமி ஆலயம். மெய்நின்றநாதர் என்று இன்னும் தமிழ் பெயரிலேயே உள்ள 800 ஆண்டுகளுக்கு பிறகு சிதிலமடைந்திருந்த சிவன் கோவிலை மறுசீரமைப்பு செய்து பழமையான கல்வெட்டுகளை அப்படியே வைத்து புணரமைப்பு செய்யப்பட்டதுடன் கோவில் முன்பு உள்ள தடாகத்தில் 82 அடி உயரத்தில் பிரமாண்ட சிவன் சிலையும் எதிரே ஏழேகால் அடி உயரத்தில் தலைமைப் புலவர் நக்கீரருக்கு கருங்கல் சிலையும் அமைக்கப்பட்டு கடந்த 2016 ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தினசரி ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

மன அமைதிக்காக தினசரி வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து செல்போன்களையே பார்த்துக் கொண்டிருப்பதால் மன அமைதியும் கிடைப்பதில்லை, கண் பார்வையும் குறையும் என்பதை உணர்ந்த கோவில் குருக்கள் சிவசிதம்பரம் கோயிலில் ஒரு நூலகத்தை தொடங்கி புத்தகங்களை வைத்தால் மன அழுத்தம், மனக்கவலையுடன் வரும் பக்தர்கள் மனநிம்மதி பெற்றுச் செல்வார்கள் செல்போன்கள் பார்ப்பதும் அதனால் ஏற்படும் நோய்களும் குறையும் என்று உடனே நூலகத்தை திறந்து வைத்தார்.

முதலில் கொஞ்ச புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட நூலகத்தில் பக்தர்கள் பலரும் படிக்கத் தொடங்கியதால் அடுத்தடுத்து பல புத்தகங்களை பக்தர்கள் உதவியால் வாங்கி வைக்க தினசரி 20 க்கும் மேற்பட்டோர் வந்து அமைதியான கோவில் வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனையறிந்த சுனையக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் எம்.எஸ்.ரவி தன்னிடம் இருந்த கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் என பல தலைப்புகளில் உள்ள 108 புத்தகங்களை மெ்நின்றநாதர் கோவில் நூலகத்திற்கு வழங்கினார்.

 Library in Shiva temple- 108 books provided by Govt school teacher

தொடர்ந்து அவர் கூறும் போது, 'நிறைய புத்தகங்களை வாங்கி படிக்கும் பழக்கமுள்ள நான் படித்து முடித்த ஏராளமான புத்தகங்களை மற்றவர்களும் படிக்க வேண்டும் வீணாக்கிவிடக் கூடாது என்று நண்பர்களிடம் சொன்ன போது தான் கீரமங்கலம் சிவன் கோவில் நூலகம் பற்றி தெரிந்தது. அதனால் 108 புத்தகங்களை வழங்கி இருக்கிறேன்' என்றார்.

கோவிலில் நூலகம் தொடங்கியுள்ள கோவில் குருக்கள் சிவசிதம்பரம் சொல்லுகையில், 'கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். வரும் பக்தர்கள் அமைதியை தேடி வந்து செல்போன்களில் மூழ்கிப் போவார்கள். நானும் ஓய்வு நேரங்களில் செல்போன் பார்த்திருக்கிறேன். ஆனால் தொடர்ந்து செல்போனை பார்ப்பதால் கண் பாதிப்பு வரும் என்பதை உணர்ந்தேன். இதனால் மன அமைதி இல்லாமல் இருந்தது. பிறகு நான் கொஞ்ச புத்தகங்களை வாங்கி வந்து கோவிலில் அமர்ந்து படித்த போது மன அமைதியை உணர்ந்தேன். படித்துவிட்டு வைத்திருக்கும் புத்தகங்களை பல பக்தர்கள் எடுத்து வாசிப்பதைப் பார்த்தேன் ஏன் நாம் நூலகம் தொடங்கலாமே என்று தொடங்கினேன். இப்ப பல நூறு புத்தகங்கள் வந்துள்ளது.

இதில் ஆன்மீகம் புத்தகங்கள் மட்டுமல்ல தமிழ் இலக்கியங்கள், அரசியல், வரலாறு, அறிவியல், கணிதம், தலைவர்கள் பற்றியது, உயர்கல்விக்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் என அனைத்தும் உள்ளது. மன அமைதிக்காக எங்கள் ஆலயம் வரும் பக்தர்களுக்கு ஆன்மீகத்தோடு மன அமைதி, நிம்மதியோடு சேர்த்து அறிவையும் கொடுக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் வந்து அமர்ந்து அமைதியாக படிக்கலாம் நீங்கள் படித்த புத்தகங்களை மற்றவர்கள் படித்து பயன்பெற கொடுக்கலாம்'' என்றார்.

கோவிலில் நூலகம் திறந்த குருக்களுக்கும் புத்தகங்களை வழங்கிய அரசு பள்ளி ஆசிரியருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறினோம்.

சார்ந்த செய்திகள்