திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் வசித்துவருபவர் பொற்றாமரை. இவரது மகன் சிவக்குமார் (40). ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலை பார்த்துவந்த இவர், நான்கு வருடங்களுக்கு முன்பு பணி மாறுதல் காரணமாக தொட்டியம் பகுதியில் உள்ள கொசவம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். கடந்த 22ஆம் தேதி இவர் வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த நிலையில், அவரை மீட்டு தனியார் மருத்துவமனை அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து 7 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 30ஆம் தேதி இறந்தார். உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பபட்டு அதன் அறிக்கை இன்னும் வரவில்லை. இந்த நிலையில், அவரது தாயார் வீட்டை சுத்தம் செய்யும்போது கடிதம் ஒன்று சிக்கியிருக்கிறது. அந்தக் கடிதத்தை சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலருக்கு எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘தொட்டியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்துவருபவர் மாணிக்கவாசகம். இவர் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்துவருவதாகவும், தன்னை வெட்டுவேன், கொல்வேன் என்று கூறியதாகவும்.
பள்ளிக்கு வரும்போது குடித்துவிட்டு வருவதாகவும், மாணவர்கள் முன்பு குடிக்கிறார். இதனால் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘எனது வாட்டர் பாட்டிலைத் தூக்கி எறிதல் மற்றும் வேறொரு ஆசிரியரின் டிபன் பாக்ஸ்களைக் கொண்டு என்னை தாக்கமுற்பட்டார். இதனால் நான் மருத்துவமனையில் ஒருவாரமாக இருந்தேன். எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தைக் கண்டவுடன் அவரது தாயார் பொற்றாமரைக்கு தனது மகனின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அவர், தனது மகன் இயற்கையாக உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார் என்று நினைத்துள்ளார். ஆனால், இந்தக் கடிதத்தைக் கண்டவுடன் அவரது இறப்பு தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகித்துள்ளார். எனவே காவல்துறையினர் இந்தக் கடிதத்தைக் கொண்டு பள்ளியில் உள்ள ஆசிரியர்களை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்கள், டிஜிபி, திருச்சி எஸ்.பி. உள்ளிட்ட 12 அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம் என்றார்.