தமிழகத்தில் மீத்தேன் எடுக்க அனுமதிக்க கூடாது என்று டெல்டா மாவட்டங்களில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடர் போராட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி இல்லை என்று அறிவித்தார். அதன் பிறகு கடந்த 2017 பிப்ரவரியில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில் அங்கு வெடித்த போராட்டம் தமிழகம் கடந்தும் பரவியது. 197 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு திட்டம் கைவிடப்படுவதாக கூறினார்கள்.
அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லை, வடகாடு, வானக்கன்காடு, கரு வடதெரு, கீழத்தெரு, கோட்டைக்காடு முள்ளங்குறிச்சி, புதுப்பட்டி உள்பட 8 இடங்களில் ஒஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டு எண்ணெய் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகளை பாதுகாப்பாக மூடி விவசாயிகளிடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அப்போதைய மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆழ்குழாய் கிணறுகளை மூடுவதாக கூறியதுடன் எழுதிக் கொடுத்தார். ஆனால் 4 வருடங்கள் முடிந்தும் இன்னும் மூடப்படவில்லை என்ற ஆதங்கம் விவசாயிகளிடம் இருந்த நிலையில் கடந்த மாதம் ஒஎன்ஜிசி அதிகாரிகள் ஒவ்வொரு ஆழ்குழாய் கிணறுகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கை ஒஎன்ஜிசி தலைமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் முதல்கட்டமாக புதுப்பட்டி மற்றும் கோட்டைக்காடு முள்ளங்குறிச்சியில் உள்ள 2 எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகளை மூட முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்த ஒஎன்ஜிசி அதிகாரிகள் பொதுமேலாளர் சாய்பிரசாத், சிவில் பொதுமேலாளர் ரவி, துணைப்பொது மேலாளர் (மனிதவளம்) ஜோசப்ராஜ், வட்டாட்சியர் (அயற்பணி) தமீமுன் அன்சாரி ஆகியோர் கடிதம் கொடுத்துள்ளனர். அதில் ஒஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகள் மூடப்பட உள்ளதால் அதிலிருந்து உடைத்து சேகரிக்கப்படும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள 11 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள மண் மற்றும் ஜல்லி கற்களை மாவட்ட வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள கேட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதுப்பட்டி, கோட்டைக்காடு முள்ளங்குறிச்சி எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.