திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோபனாபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள ஒசரப்பள்ளியைச் சேர்ந்த ஜெயராஜ் - மகேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது 11 வயது இளைய மகன் ஹரிஹரன் சோபனாபுரத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழக முதல்வருக்கு தங்கள் பகுதிக்குப் பேருந்து வசதி கேட்டு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.
அதில், தங்கள் ஊரில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர் என்றும், இவர்களது குழந்தைகள் சோபனாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் பகுதிக்கு இதுவரை பேருந்து வசதி இல்லாத காரணத்தால் என்னைப் போன்ற சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் இரண்டு கிலோமீட்டர் தொலைவு காலை, மாலை என இரு வேளையும் நடந்த சென்று படித்து வருவதாகவும், தமிழக முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், நாங்கள் தினமும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு சென்று படித்து வருவதாகவும், மாலை நேரத்தில் நடந்து வருவதால் களைப்பாகி விடுகிறது. எனவே தங்கள் பகுதிக்குப் பேருந்து வசதி செய்து தர வேண்டும் எனக் கடிதத்தில் ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்த ஊர்ப் பொதுமக்கள் ஹரிஹரன் 11 வயதிலேயே சமூக ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதாகப் பாராட்டி உள்ளனர்.