நேற்று முன்தினம் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, ''கட்சி தான் முக்கியம் என நினைப்பதால் இந்த விஷயங்களை பெரிதுபடுத்த விரும்பவில்லை. இருப்பினும் இந்த நிகழ்வு எனக்கு மன வேதனை அளிக்கிறது. இது குறித்து எதுவும் நான் தெரிவிக்க விரும்பவில்லை'' என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருச்சி சிவாவின் இல்லத்திற்கு கே.என். நேரு வருகை புரிந்து இருவரும் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். அவருடன் 200க்கும் மேற்பட்ட திமுகவினரும் அங்கு வந்திருக்கின்றனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு எம்.பி திருச்சி சிவாவும், அமைச்சர் கே.என்.நேருவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய கே.என்.நேரு, ''இறகு பந்து மைதானம் திறந்து வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது எந்த இடத்தில் அமைந்துள்ளது என்று கூட எனக்கு தெரியாது. இங்கு சில பேர் எங்கள் அண்ணன் பெயர் போடாமல் எப்படி நீங்கள் இங்கு வரலாம் என்று கேட்டார்கள். அதற்கு நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை போய் பாருங்கள் நான் என்ன பண்ணுவேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டேன். பிறகு நடக்கக் கூடாத ஒரு விஷயம் அதுவும் கழக குடும்பத்தில், அதுவும் கழகத்தில் உள்ள ஒருவருடைய வீட்டில் இப்படி நடந்துள்ளது. என்னுடைய துரதிஷ்டம் என்னவென்று சொன்னால் காவல்துறையினர் கருப்புக்கொடி காட்டியவர்களை ஏற்றுவதற்காக ஒரு பெரிய வேனை கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள். என்னுடைய வண்டி பின்னால் போய்விட்டது. அப்பொழுது நடக்கக் கூடாத விஷயம் நடந்து விட்டது.
சிவா என்னை விட இரண்டு வயது கம்மிதான். எங்க ஊர்க்காரர். அதனால் நீங்கள் ஒன்னும் நினைக்காதீர்கள். தெரிந்திருந்தால் நான் இதை அனுமதித்திருக்க மாட்டேன். முதல்வர் கேட்டபோது கூட நான் இதைச் சொன்னேன். நான் போய் ஏன் இந்த வேலையை செய்யப் போறேன் என்று சொன்னேன். சிவாவும் திமுகவில் மூத்த தலைவர். பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அவமதிப்பு ஏற்பட்டுவிட்டால் அது கழகத்திற்கு நல்லதல்ல. ஆறு மணிக்கு அவரை பார்த்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன் என்றேன். வந்து விட்டேன். பார்த்து விட்டேன். இனி இந்த மாதிரி எதுவும் நடக்காது. நடக்கவும் கூடாது'' என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, ''நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்கின்ற தலைவருடைய குரல் எங்கள் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் மிகுந்த பொறுப்புணர்வோடு நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கும் சூழலில் அவருடைய மனம் சங்கடப்படுகின்ற அளவுக்கு எந்த காரியங்களும் நடந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறோம்.
அமைச்சர் நேரு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். அவருக்கு இதில் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று சொன்னார். நான் அதையே கேட்டுக் கொண்டேன். முதலில் நான் சொன்னதைப் போல் எங்களைப் பொறுத்தவரை இயக்கத்தினுடைய வளர்ச்சி முக்கியம் என்கின்ற வகையில் அவர் ஆற்றுகின்ற தொண்டினை என்னால் ஆற்ற முடியாது. நான் செய்கின்ற பணிகளை அவர்கள் வரவேற்கிறார்கள். இப்படி பலதரப்பட்டவர்கள் இணைந்து பணியாற்றுகின்ற இந்த கழகத்தில் கழக வளர்ச்சிக்காக எங்களுடைய வருங்கால நாட்கள் செயல்பாடுகள் இருக்கும்'' என்றார்.