Skip to main content

துரத்தியடிக்கப்பட்ட சாமியார்... ஹெச்.ராஜா மருமகன் மீது பரபரப்பு புகார்... சாரதா நிகேதன் கல்லூரி ரணகளம்... குத்தகை சொத்து அக்கப்போர்?

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

Leasing Property


"பல கோடி மதிப்புள்ள கல்லூரிகளின் சொத்துகளைக் குறி வைத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து தன்னை தகாத வார்த்தைகளால் பேசி, கடுமையான ஆயுதங்களால் தாக்கி, துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென" ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரியில் ஆசிரமத்தைச் சேர்ந்த சுகுனாநந்தா எனும் சாமியார் சோமநாதபுரம் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், புகாருக்குக் காவல் நிலையத்தாரால் மனு ரசீது அளிக்கப்பட்டுள்ளது. எனினும், குற்றச்சாட்டிற்கு ஆளான நபர் சூர்யபிரகாஷ் ஹெச்.ராஜாவின் மருமகன் என்பது வெளியாக அரசியல் வட்டாரமே பரப்பரப்பாகியுள்ளது.
 


கரூர் பசுபதிபாளையத்தில் வசித்து வரும் சுவாமி ஆத்மானந்தா பக்தர்களால் வழங்கப்பட்ட பல்வேறு சொத்துகளை ஸ்ரீ சாரதா நிகேதன் ட்ரஸ்ட் எனும் பெயரில் மடைமாற்றி தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் சொத்துகளை வைத்துள்ளர். இந்த ஸ்ரீ சாரதா நிகேதன் ட்ரஸ்ட் மேற்பார்வையில் சேலம் கணவாய் புதூரில் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியும், சென்னையில் ஒரு அனாதை ஆசிரமத்தையும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் மகளிர் கல்லூரியும் நடத்தப்பட்டு வருகின்றது, மேற்கண்ட ட்ரஸ்டிற்கு ஏழு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என்கின்ற அடிப்படை உருவாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களே சொத்துகளை நிர்வகிக்கலாம் என ட்ரஸ்டால் முடிவெடுக்கப்பட்டு அதன்படியே தொன்று தொட்டு நடைப்பெற்று வருகின்றது.

இவ்வேளையில், காரைக்குடி அருகேயுள்ள அமராவதி புதூரில் உள்ள ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் சொத்துகளையும் மற்றும் ஸ்ரீ சாரதா நிகேதன் ட்ரஸ்ட் உறுப்பினர்களாகச் சிலரையும் தங்கள் பக்கம் மாற்றியமைக்க வெவ்வேறு இரு தரப்பினர், ட்ரஸ்டின் தலைவரும், மடத்தின் அதிபருமான சுவாமி ஆத்மானந்தாவிடம் பல நாட்களாக பஞ்சாயத்து செய்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதற்காக சுவாமி ஆத்மானந்தா கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
 


இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று இரவு 9 மணியளவில் ஸ்ரீ சாரதா நிகேதன் ட்ரஸ்ட் தலைவரான ஆத்மானந்தாவின் சீடர் சுகுனாநந்தா எனும் 76 வயது சாமியார் சட்டை கிழிந்து, உடலெங்கும் காயம்பட்ட நிலையில் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று, "விமானப்படையின் முன்னாள் அதிகாரியான நான், என்னுடைய மனைவி இறந்த நிலையில் ஆன்மிக ஈடுபாடு கொண்டு சுவாமி ஆத்மானந்தாவிடம் சேர்ந்து தொண்டு புரிந்து வந்தேன். நேற்று மாலையில் கல்லூரிக்கு வந்த 30க்கும் மேற்பட்டவர்கள் சாமியார் எங்கேடா..? அவனைக் கூப்பிடு..? கண்டவனையெல்லாம் ட்ரஸ்ட் உறுப்பினராகப் போட அவனுக்கு என்ன உரிமை இருக்கு..? ஒழுங்கு மரியாதையாகக் கையெழுத்துப் போட்டுட்டு ஊரைவிட்டு ஓடிடுங்க," எனக் கூறிக் கொண்டே சாமியைத் தேடினார்கள். பிறகு அவர் இருந்த அறைக்கதவை உடைத்து அவரை எழுப்பி உட்கார வைத்து, "புதிய ட்ரஸ்ட் உறுப்பினர்களாக சுந்தரவள்ளி, ஷாலினி, சிவஞான பிரியா, ரேவதி மற்றும் ஞானேஸ்வரை போடனும்." என மிரட்டினார்கள். இது கண்டு நான் கத்த என்னை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அது வேறு யாருமல்ல பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மருமகன் சூர்யபிரகாஷ் மற்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் இந்து முன்னணி நிர்வாகி அக்னிபாலா உட்பட 30 பேர்" எனப் புகாரளித்தார். காவல்நிலையத்தாரும் வேறு வழியில்லாமல் புகார் மனு ஏற்பு ரசீது அளித்தனர். எனினும், "தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், தாக்குதலையும், சுவாமி ஆத்மானந்தாவின் நிலையையும் வீடியோவாக்கி வாட்ஸ் அப்பில் பரவவிட்டார் சீடர் சுகுனாநந்தா. வைரலான வீடியோவால் அரசியல் வட்டாரமே பரப்பரப்பானது.

இது இப்படியிருக்க, "சாரதா நிகேதன் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமானவர் ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர். தற்போது இந்தக் கல்லூரியைத் திருப்பத்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியகருப்பன் காரைக்குடித் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமசாமி இருவரும் சேர்ந்து அவர்களது குண்டர் படைகளை வைத்துக்கொண்டு மொத்த கல்லூரியையும் மிரட்டி தன் பெயருக்கு எழுதி கேட்கின்றனர். இதன் விவரம் அறிந்து தற்போது அங்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் அனைவரும் கல்லூரி நிர்வாகிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியுள்ளனர். இந்தச் செய்தி அறிந்த ஹெச்.ராஜா ஜி அந்தக் கல்லூரி நிர்வாகியைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கின்றார். இப்படியே போனால் நாளை உங்களுடைய இடமாக இருந்தாலும் என்னுடைய இடமாக இருந்தாலும் தி.மு.க. குண்டர்களால் மிரட்டி எழுதி வாங்கப்பட்டுவிடும்.." என்கின்ற முகவரியில்லாத செய்தியும் வாட்ஸ்ப்பில் வைரலாகி வருகின்றது.

 

http://onelink.to/nknapp

 

இது குறித்து கருத்தறிய பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மருமகன் சூர்யபிரகாஷினைத் தொடர்பு கொண்டோம்., "இது முழுக்க முழுக்கப் பொய்.! கை உடைந்து மருத்துவச் சிகிச்சையில் இருக்கும் நான் எப்படி அங்கே போயிருப்பேன். எப்படி அடிக்க முடியும்..? அது போக இந்தச் சொத்துகளை அபகரிப்பதற்காக அலையும் கூட்டத்தினை சேர்ந்தவர் இந்த சுகுனாநந்தா. இந்து மதத்திற்குச் சொந்தமான சொத்துகளைத் தகுதியில்லாத சிலர் அபகரிக்கவுள்ளனர் என்பதால் தலையிட்டேன். அவ்வளேவே.! எனக்கும் நடந்த சம்பவத்திற்கும் எந்தப் பொறுப்பும் இல்லை. தி.மு.க., காங்கிரஸாருக்கு எவ்வித சம்பந்தமுமில்லை." என்கிறார் அவர்.

"முதலில் இந்தச் சொத்து ஸ்ரீ சாரதா நிகேதன் ட்ரஸ்டிற்கே சொந்தமானது அல்ல.! ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரி அமைந்துள்ள இடம் அமராவதிபுதூர் கிராமம் பட்டா எண் 365, சர்வே எண் 160/18க்குட்ப்ட்ட 16 ஏக்கர் 77 செண்ட் அளவிலான இடம் சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பாலையூரைச் சேர்ந்த ராமசாமிக்கு சேர்ந்தது. அவரிடமிருந்து குத்தகைக்கு வாங்கியவர்கள் இப்பொழுது இதனை விற்கும் முயற்சியில் இருக்கின்றார்கள்." என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது

 


 

சார்ந்த செய்திகள்