உள்ளாட்சி முதல் கட்ட தேர்தல் 27-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 26-ஆம் தேதி (இன்று) முற்பகல் நேரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் இரட்டை இலை வேட்பாளர்கள் யாரும் வெளியில் தலைகாட்டவில்லை.
கால நேரம், ஜோதிடத்தில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சொல்லித்தான் அவ்வாறு நடந்து கொண்டார்களாம். சூரிய கிரகணம் என்பதால், காலை 8 மணியிலிருந்து 11-30 மணி வரை வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது, அந்த நேரத்தில் எதுவும் சாப்பிடக்கூடாது என்று வேட்பாளர்களுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் கறாராக உத்தரவே பிறப்பித்துவிட்டாராம் அமைச்சர்.
சூரியன் மறையும் நேரமான சூரிய கிரகணத்தில் இலை வேட்பாளர்கள் ஏன் மக்களிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சரின் ஜோதிட கருத்துக்கு எதிராக பகுத்தறிவுக் கருத்தை வெளிப்படுத்துவதெல்லாம் எங்கள் கட்சியில் நடக்கக்கூடிய காரியமா என்ன? என்று முணுமுணுத்தார், அக்கட்சியில் சீனியரான அந்தக் காலத்து சுயமரியாதைக்காரர் ஒருவர்.