சென்னையில் சமத்துவ வழக்கறிஞர் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘சமூகநீதி வெல்லும்’ என கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர் பா.பா. மோகனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழா சர். பி.டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழா விசிக கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில், மூத்த தலைவர் அய்யா இரா.நல்லக்கண்ணு, சிபிஐ மாநிலத்தலைவர் கே. பாலகிருஷ்ணன், நீதிபதி அரிபரந்தாமன், திராவிட கழக அருள்மொழி, உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் தீபிகா சிவக்கொழுந்து, கு. பாரதி, விசிக பொ.செ. ரஜினிகாந்த், தோ.ம.ஜான்சன் ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
இதில் பேசிய வழக்கறிஞர் பா.பா. மோகன், “இந்த வழக்கில் வெற்றி பெற்ற உடன் மூன்று நபர்களை முதலில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவர்கள் நல்லக்கண்ணு, கி.வீரமணி, தொல். திருமாவளவன். இவர்கள் அனைவரும் முற்போக்கு சிந்தனை உடையவர்கள். அதனை நிலைநாட்ட வேண்டும் எனப் போராடுபவர்கள். இதில் நான் மட்டும் போராடியிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியாது. என் பின்னால் இருந்த வழக்கறிஞர்களின் உழைப்பு தான் இந்த வெற்றி. எது என்னை வெற்றிபெறவைத்தது என்றால், உழைப்பை தாண்டி உண்மையை முன்னிறுத்தியதே. ஒரு ஆணும் பெண்ணும் பழகுவது என்பது அடிப்படை உரிமை. அந்த உரிமையை அழிப்பது எவ்வளவு கேவலமானது. மீண்டும் இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னால் கூட்டிச்செல்லும் வேலையைத்தான் இவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்களே தவிர முற்போக்கு காரியங்களை இவர்கள் செய்யப் போவதில்லை. இதை மாற்றவே நாம் அனைவரும் போராட வேண்டும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து ப.பா மோகனுக்கு விசிக சார்பாக வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயை, அவர் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்திற்காக அய்யா நல்லக்கண்ணுவிடம் வழங்கினார்.
இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “இந்த வழக்கை வெற்றிபெற வைத்த அய்யாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோகுல்ராஜ் படுகொலை மற்ற ஆணவ படுகொலைகளைக் காட்டிலும் முற்றிலும் புதிதானது. ஆணவக் கொலைகளுக்கான வட இந்தியக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய போக்கு அது. இந்து பெரும்பான்மையை அணிதிரட்ட வெறுப்பு அரசியலைத் திணிக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதனை அப்படியே தமிழகத்தில் பின்பற்றுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். வட இந்தியாவில் இஸ்லாமியர் வெறுப்பு அரசியலை முன்னெடுப்பது போல, தமிழகத்தில் தலித் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறார் ராமதாஸ். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று சனாதனத்திற்கு எதிராகப் போராடியதால்தான் இந்த பாராட்டு விழா. கருத்தியல் அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும்” என்று பேசினார்.