நாமக்கல் அருகே சட்டக்கல்லூரி மாணவர் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர்கள் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி, வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ஜீவா. இவருடைய மகன் சங்கீத்குமார் (21). ஆந்திரா மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சங்கீத்குமார் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர்கள் அலெக்ஸ் என்கிற அலெக்ஸாண்டர் (30), மவுலீஸ் என்கிற மவுலீஸ்வரன் (25), பரத் என்கிற பாரத் (25) ஆகியோருடன் சேர்ந்து சங்கீத்குமார் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். கைச்செலவுகளுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சங்கீத்குமாருக்கும் கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விடிந்தால் தீபாவளி பண்டிகை என்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 23) நள்ளிரவு கொசவம்பட்டி மயானம் அருகே அலெக்ஸ், மவுலீஸ், பரத் ஆகியோர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சங்கீத்குமார் அங்கு சென்றார். அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த கூட்டாளிகள் சங்கீத்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக சங்கீத்குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் நண்பர்கள் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சங்கீத்குமார் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். அவர் இறந்துவிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் நகர காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க நாமக்கல் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் சங்கரபாண்டியன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சடலம் உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து கொலையாளிகளின் செல்போன் எண்களை வைத்து அவர்கள் பதுங்கியுள்ள இடம் குறித்து தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதற்கிடையே நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் தலைமையிலான தனிப்படையினர் புதன்கிழமை (அக். 26) போதுப்பட்டி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பேருந்தில் இருந்து இறங்கிய அலெக்ஸ், மவுலீஸ், பரத் ஆகிய மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மேலும் கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்ததாக கோணங்கிப்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (19) கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கொசவம்பட்டியைச் சேர்ந்த சூர்யா (24) ஆகியோரையும் கைது செய்தனர். பிடிபட்ட ஐந்து பேரிடமும் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான உண்மையான காரணம், இந்த சம்பவத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பன குறித்து பலவேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.