தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்த கனமழை காரணமாக மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 181 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
இந்நிலையில் கூடலூரில் மங்கொலி பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்தது. அப்பொழுது வெள்ளத்தில் ஒருவர் சிக்கிக்கொள்ள அங்கிருந்த பொதுமக்கள் கையில் இருந்த துண்டை ஒன்றாக கட்டி அதை வைத்து வெள்ளத்தில் சிக்கியவரை போராடி மீட்டனர். இந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.