Skip to main content

கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து ஏரியை நிரப்பும் போராட்டம்

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

 


அரியலூர் நகரத்தில் இரயில்வே நிலையம் அருகில் உள்ள பள்ள ஏரியில் இறங்கி விவசாயிகள் பொதுமக்கள் கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து ஏரியை நிரப்பும் போராட்டத்தைச் செய்தனர். இந்தப் போராட்டத்தின் வாயிலாக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் குடிநீர் இல்லாமல் மக்கள் படும் பாட்டை தெரிவிக்கவே கொட்டாங்குச்சியில் தண்ணீர் எடுத்து ஏரியை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Farmers struggle



அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2322  குளங்கள் குட்டைகளை மீட்க கோரியும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்களை தூர் வாரிடவும், ஏரி ஏரிகுளங்களுக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரிடவும், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் நகர மக்கள் போர்வெல் மூலமே பெரும்பகுதி தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. தற்போதோ அரியலூர் நகர மக்கள் குடிநீருக்கு மிகவும் அல்லாடுகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் நீர் மேலாண்மை திட்டத்தில் அக்கறை காட்டாத காரணத்தால் குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர் மட்டமும் சராசரியாக 80 அடியில் கிடைத்த தண்ணீர் பல இடங்களில் போர்வெல் இயங்காமல் தவித்து வருகின்றனர். 
 

தற்போது நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து 450 அடிக்கு கீழே சென்றுவிட்டது. குடிநீரை முறைகேடாக பூமியில் துளையிட்டு இராட்சத போர்வெல் அமைத்து எடுக்கும் சிமெண்ட் தொழிற்சாலைகளை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து ஆய்வு நடத்த வேண்டும். மின்சாரம் தயாரிக்க சிமெண்ட் ஆலைகள் தினசரி 9 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். இதன் மூலம்  மாவட்டத்தின் ஒட்டுமொத்த ஒரு மாதத்திற்கு தேவையான நிலத்தடி நீரை ஒரே நாளில் உறிஞ்சுகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததோடு குடி நீர் தட்டுப்பாடு நிலவ காரணமாக உள்ளது. 


 

மேலும் இனி மாவட்டங்களில் ஏரி குளங்களில் மீன் பிடிக்க தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மீன் வளர்ப்பு என்ற பெயரில் ஏரி குளங்களை தீவனங்களை போட்டு தண்ணீரை மாசுபடுத்துகின்றனர். இவற்றைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிமெண்ட் ஆலைகள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்