ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இது அடர்ந்த வனப்பகுதி அருகில் அமைந்துள்ளது. இந்த அணையின் உயரம் மொத்தம் 42 அடி. இந்த அணைக்கு கடம்பூர் மலையான மல்லியம்மன், துர்க்கம் மற்றும் குன்றி விளாங்கோம்பை ஆகிய வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் காட்டாறு போல் பெருக்கெடுத்து குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்துசேரும். இந்த அணையை அடுத்து வனப்பகுதியில் பல கிராமங்கள் உள்ளது.
குறிப்பாக விளாங்கோம்பை மற்றும் கம்பனூரில் சுமார் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது காட்டாறு பெருக்கெடுத்து ஓடும். அந்த வனப்பகுதியில் வசிக்கிற மக்கள் நகரப் பகுதிக்கு வர வேண்டும் என்றால் சுமார் 12 கிலோமீட்டர் வனப்பகுதியைக் கடந்துதான் வரவேண்டும். இந்த வனப்பகுதிக்கு தார்ச்சாலை என எதுவும் இல்லை. கால்நடையாகத் தான் வரவேண்டும். அப்படி இந்த 12 கிலோ மீட்டர் பகுதியை அந்த மக்கள் கடக்கும்போது குண்டேரிப்பள்ளம் அணைக்கு வருகிற வழியில் நான்கு இடத்தில் காட்டாறுகள் உள்ளது.
மழை பெய்து ஓய்ந்துவிட்டது என நினைத்து அந்தக் காட்டாறுகளைக் கடந்தால் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து வந்து மக்களை அடித்துச் செல்லும். அப்படித்தான் கடந்த இரு நாட்களாகப் பெய்த மழையினால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறு போல் வந்தது. இரண்டு நாட்களாக அந்த கிராமத்தில் இருந்து அத்தியாவசியத் தேவைக்குக்கூட வெளியே வரமுடியாமல் மக்கள் சிரமப்பட்டுள்ளனர். குறிப்பாக மருத்துவம் உள்ளிட்ட எந்தத் தேவைக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் அந்த கிராமத்திலேயே சிறைபட்டுக் கிடந்தனர். அதையும் மீறி மக்கள் அந்த காட்டாறுகளைக் கடந்து சென்றால் உயிரைப் பணயம் வைத்துச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
இந்தக் காட்டாறு ஏற்படும் நான்கு இடங்களில் பாலம் அமைக்கக் கோரி அந்த மலைவாழ் மக்கள் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கோரிக்கை வைத்துப் போராடி வருகிறார்கள். அத்தியாவசியத் தேவைகள் மட்டுமில்லாமல் அங்கு வசிக்கும் மக்களின் குழந்தைகள், கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றாலும் இந்தக் காட்டாறுகளைக் கடந்து குண்டேரிப்பள்ளம் அதை ஒட்டிய கிராமங்களுக்குத் தான் வரவேண்டும். தற்போது ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பள்ளிகள் திறக்கலாம் என அரசு அறிவித்துவிட்டது. அங்கு வசிக்கும் மாணவர்கள் எப்படிப் பள்ளிக்கு வருவார்கள். விரைவில் தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்பட்டால் அந்தக் குழந்தைகளும் எப்படி நடந்துவரும் என நினைத்தாலே பரிதாபமாக உள்ளது. இரண்டு மாதத்திற்கு முன் காட்டாறு ஏற்படும் பகுதிகளில் பாலம் அமைக்கப்படும் எனச் சொல்லி பூமி பூஜையும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.