திருவாரூரிலிருந்து நீட் தேர்விற்காக எர்ணாகுளம் சென்ற கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
எர்ணாகுளம் நலந்தா பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வெழுத சென்ற திருவாரூர் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வெழுதும் நேரத்தில் அறையில் தங்கிருந்த அவரது அப்பா கிருஷ்ணசாமி மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். தேர்வு முடித்துவிட்டு வெளியே வந்த அந்த மாணவன் தன் அப்பாவின் இறப்பு குறித்து அறிந்து துடிதுடித்து போனான்.
தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சிறப்பு வட்டாட்சியர் இன்னாசிராஜி மற்றும் காவல் ஆய்வாளர் ராஜகோபால் ஆகியோர் தலைமையிலான குழு உடலை பெற நேற்று எர்ணாகுளம் விரைந்து உடலை பெற்று ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை 4.30 க்கு மணிக்கு திருவாரூர் புறப்பட்டு இன்று காலை சுமார் 2 மணி அளவில் சொந்தஊரான விளக்குடியை வந்தடைந்தது.
அவரின் உடலின் வருகைக்காக அந்த ஊர் மக்கள் குடும்பத்தார் என அனைவரும் கண்ணீர் பெருத்த துயரத்துடன் காத்திருந்தனர். அவர் உடல் வந்தடைந்ததும் அவரது குடும்பத்தார் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
அவரது உடலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனால் அந்தப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.