கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில் (அதிகாலை 3 மணியளவில்) அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் என்று கூறிய காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த வழக்கை விசாரிப்பதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணைக் குழு கிருஷ்ணகிரியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே முக்கிய குற்றவாளியான சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேசமயம் சிவராமனின் தந்தை அசோக்குமாரும் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் சிவராமனும், அவரின் பயிற்சியாளர்கள் குழுவும் சேர்ந்து இதே போன்று போலி என்.சி.சி முகாம் நடத்தியுள்ளனர். அந்த முகாமில் தங்கியிருந்த 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இந்த வழக்கில், சிவராமன், சுதாகர், கமல் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த பள்ளியின் பெண் முதல்வர் வினோதினியை போலீசார் கைது செய்தனர்.
அதே சமயம் சிவராமனுக்கு போலி என்.சி.சி. முகாம் நடத்த உதவிய அரசு பள்ளியின் என்.சி.சி. மாஸ்டர் கோபு (வயது 47) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். போலி என்.சி.சி. முகாம் நடத்தச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்தது, பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தகவலை அறிந்தும் அதனை மறைத்தது உள்ளிட்ட குற்றத்திற்காக கோபு போக்சோ சட்டத்தின் கீழ் சிறப்பு புலாணாய்வு குழுவினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உயிரிழந்த சிவராமனுக்கு உதவியாக இருந்ததாக காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு வழக்கிலும் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.