கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பாகலூர் சாலையில் தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை மஞ்சுளா என்பவரிடம் இருந்து அரவிந்த் என்பவர் வாங்கியுள்ளார். பள்ளியைத் தொடர்ந்து நடத்த தீயணைப்புத்துறை, போக்குவரத்து, வருவாய் உள்ளிட்ட துறைகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம். இதையடுத்து, தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வழங்கக்கோரி அரவிந்த், மாவட்ட வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து இருந்தார்.
அதன்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் வட்டாட்சியர் கவாஸ்கர், சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளியில் சில குறைகள் இருப்பதாகவும் அவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்ட அரவிந்த், தொகை அதிகமாக இருப்பதாகப் பேரம் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் 42 ஆயிரம் ரூபாய்க்கு வட்டாட்சியர் கவாஸ்கர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அரவிந்த், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அரவிந்த்திடம் 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் ரசாயன பவுடர் தடவி அவரிடம் கொடுத்து அனுப்பினர்.
அந்த பணத்துடன் சென்ற அரவிந்த், கடந்த 14 ஆம் தேதி வட்டாட்சியர் கவாஸ்கர், துணை வட்டாட்சியர் மங்கையர்க்கரசி ஆகியோரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். லஞ்ச வழக்கில் வட்டாட்சியரும், பெண் துணை வட்டாட்சியரும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட வருவாய்த்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.