கணவனை இழந்த பெண் ஒருவரிடம் நகைகளை வாங்கிக் கொண்டு, திருப்பித் தராமல் கொலைமிரட்டல் விடுத்த புகாரின்பேரில் பாஜக மாவட்ட செயலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி அருகே உள்ள பெரிய ஜெட்டுப்பள்ளத்தைச் சேர்ந்தவர் மேனகா (வயது 40). இவர் கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோயில் அருகே மீன் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய கணவர் கோவிந்தன் 13 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பாஜக கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரான மன்னன் என்கிற சிவக்குமாரும் (வயது 44) மேனகாவும் பழகி வந்துள்ளனர். இதனால் அவர்களிடையே திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்து வந்தது. மன்னன் அடிக்கடி மேனகா வீட்டுக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய குழந்தைகள் பெரியவர்களாகி விட்டதால் இனிமேல் வீட்டுக்கு வர வேண்டாம் என மேனகா கூறியுள்ளார். ஆனால் மன்னன் அதை கண்டுகொள்ளாமல் அடிக்கடி வீட்டுக்குச் சென்று தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, மன்னனிடம் கொடுத்து வைத்திருந்த தன்னுடைய 20 பவுன் நகையை மேனகா திருப்பிக் கேட்டார். ஆனால் நகையைத் தராமல் மன்னன் இழுத்தடித்து வந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மன்னன் மேனகாவை ஆபாசமாக திட்டியதோடு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேனகா கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மன்னனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் கிருஷ்ணகிரி கிளைச் சிறையில் அடைத்தனர்.