கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் விவாதிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் கோரிக்கை வைத்திருந்தார் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.ஆனால்,இந்தக் கோரிக்கையை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை.
அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் விவாதிப்பது மூலம்,கரோனா விசயத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான பிரச்சனைகள் எழும், பல்வேறு சிக்கல்கள் உருவாகும் என உணர்ந்தே ஸ்டாலினின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார் எடப்பாடி. அதேசமயம், ‘ஸ்டாலினின் இந்த ஆலோசனை தவறு; தேவையில்லாதது‘ எனக் காட்டமாக அறிக்கை தந்த திமுகவின் விவசாய அணியின் மாநிலச் செயலாளர் கே.பி.ராமலிங்கத்தின் கட்சிப் பொறுப்பை அதிரடியாகப் பறித்தார் ஸ்டாலின்.
இந்த நிலையில், கே.பி.ராமலிங்கத்தை அதிமுகவிற்கு கொண்டு வர கொங்கு மண்டல அமைச்சர்கள் வலை விரித்துள்ளனர்.கே.பி.ராமலிங்கம் அதிமுகவுக்கு தாவினால் ஸ்டாலினுக்கு எதிராகச் செயல்படுவார் என்கிறார்கள் கொங்கு மண்டல அதிமுகவினர்.இதற்கிடையே கே.பி.ராமலிங்கத்தை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.