கோவில்பட்டி 2-வது பைப்லைன் நிறைவேற்றக்கோரி
சிபிஐ(எம்) நகரச்செயலாளர் காலவரையற்ற உண்ணாவிரதம்
தூத்துக்குடி மாவட்டத்தின் 2வது பெரிய நகரம் கோவில்பட்டி நகராட்சியாகும். கோவில்பட்டி நகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க 1வது பைப் லைன் திட்டம் தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரியிலிருந்து 1976ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
அப்போது கோவில்பட்டி நகராட்சி மக்கள் தொகை 30 ஆயிரமாகும். தற்போது சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. 1 -வது பைப் லைன் திட்டத்தில் ஆயுள்காலம் 30 வருடமாகும். அதாவது 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 2006ம் ஆண்டுடன் இத்திட்டம் காலாவதியாகி விட்டது. 1-வது பைப் லைன் திட்டம் கொண்டு வரப்பட்டு 41 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. எனவே, கோவில்பட்டி நகராட்சிக்கு 2வது பைப்லைன் திட்டம் கொண்டு வர வேண்டுமென தொடர்ச்சியாக போராட்டத்திற்கு பிறகு ரூ.81.62 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு கமிசன், லஞ்சம் காரணமாக டெண்டர் எடுத்தவர் கைவிட்டு விட்டார். இதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் 2014ம் ஆண்டு மீண்டும் மறு டெண்டர் விடப்பட்டு, 18 மாத காலத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், 6 ஆண்டுகளாக இத்திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 51 கி.மீ தூரமும் பைப் லைன் பதிக்க வேண்டியதில் குருமுலையிலிருந்து ஊத்துப்படடி வரையுள்ள 1700 மீட்டர் தூரம் வனத்துறை அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் இதோடு 5 கி.மீ தூரம் பைப் லைன் பதிக்க வேண்டியுள்ளது. இத்திட்டத்தில 10 மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட வேண்டும். இதில் 3 குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்க வேலை துவங்கவே இல்லை. மேலும் கோவில்பட்டி நகராட்சி வீடுகளுக்கு குடிநீர் வழங்க தெருக்களில் 82 கி.மீ தூரம் குழாய் பதிக்கும் பணியும் துவங்கவே இல்லை. கோவில்பட்டி நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் குறைந்த அளவே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு குடம் குடிநீர் ரூ.10 விலை கொடுத்து வாங்கி உபயோகித்து வருகின்றனர்.
எனவே, 18 மாதத்தில் முடிக்க வேண்டிய 2வது பைப் லைன் திட்டத்தை 6 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை உடனே முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு கடந்த 2ம் தேதி முதல் நகர செயலாளர் ஆர்.முருகன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளார். 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் தலையிட்டு கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.