கோவை முத்தூட் நிதிநிறுவனத்தில் நடந்த 2 கோடி நகை கொள்ளை வழக்கில் அந்நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் சிக்கினார். அவருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்காதலனும் சிக்கினான்.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் நிதிநிறுவனத்தில் கடந்த 27-ந் தேதி மாலை முகமூடி கொள்ளையன் நுழைந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 804 பவுன் நகை மற்றும் ரூ.1,34,000-ஐ கொள்ளையடித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து நிதிநிறுவனத்தில் பணியில் இருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கி விட்டு நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர், நிதிநிறுவன ஊழியர்களான போத்தனூரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரது மனைவி ரேணுகா தேவி(26), கெம்பட்டி காலனியை சேர்ந்த திவ்யா(24) ஆகியோரிடம் விசாரித்தனர்.
கொள்ளையன் தாக்கியதில் மயக்கம் போட்டு விழுந்ததாகவும், 2 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த போது கொள்ளை நடந்தது தெரிந்ததாகவும் இருவரும் கூறினர். நிறுவனத்துக்குள் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையன் நுழையும் காட்சிகள் இருந்தது. ஆனால் ஊழியர்களை தாக்கும் காட்சிகள் இல்லை.
iஇதன்பின்னர், ரேணுகா தேவியின் செல்போனுக்கு அடிக்கடி வந்த சில அழைப்புகள் போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கெம்பட்டி காலனியை சேர்ந்த சுரேஷ்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களாக கோவை கெம்பட்டி காலனியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ஒரு நகைகடையிலும் வேலை பார்த்துள்ளார். முத்தூட் நிறுவனத்தில் நகையை அடகு வைக்க சென்ற போது இவருக்கு ரேணுகா தேவியின் பழக்கம் கிடைத்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
அப்போது சுரேஷ் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக கூறி ரேணுகா தேவியிடம் அவர் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்திலேயே நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தை கூறி உள்ளார். அதற்கு ரேணுகா தேவியும் சம்மதிக்க, சம்பவத்தன்று மாலை 3 மணி அளவில் முகத்தை மறைத்துக் கொண்டு நிதி நிறுவனத்துக்கு சென்று நகை, பணத்தை கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளித்த தகவலின் பேரில் கொள்ளையடிக்கப்பட்ட 804 பவுன் நகைகள், மற்றும் பணம் மீட்கப்பட்டது.
சுரேஷ் கொடுத்த தகவலின்பேரில் முத்தூட் நிதி நிறுவன பெண் ஊழியர் ரேணுகாதேவியும் கைது செய்யப்பட்டார்.