Skip to main content

கூழாங்கல் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசின் விருது கிடைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது" - இயக்குநர் வினோத் ராஜ்

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

koozhangal director vinoth raj get puduchery state award

 

புதுச்சேரி அரசு மற்றும் நவதர்ஷன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சிஸ் ஆகியவைகள் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

 

அதன்படி இந்த ஆண்டிற்கான இந்திய திரைப்பட விழா - 2022 புதுச்சேரியில் கடந்த வெள்ளி அன்று தொடங்கியது. இதில் புதுச்சேரி அரசின் சார்பாக யுவன் சங்கர் ராஜா இசையில் 2021 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி விருது வழங்கும் விழா அலையன்ஸ் பிரான்சிஸ் கலையரங்கில்  நடைபெற்றது. 

 

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுச்சேரி அரசால் தேர்வு செய்யப்பட்ட கூழாங்கல் திரைப்படத்திற்கான விருதையும், ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் இயக்குநர் வினோத்ராஜிடம் வழங்கி கௌரவித்தார்.

 

koozhangal director vinoth raj get puduchery state award

 

இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகர்கள், மற்றும் துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் வினோத்ராஜ், "நாடகத்திலிருந்து வந்த தனக்கு புதுச்சேரி அரசால் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருது கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எடுத்த திரைப்படத்திற்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திரைப்படங்கள் எப்போதுமே அனுபவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இந்த விருதை பெற்றுக் கொண்டது மேலும் பல நல்ல திரைப்படங்களை எடுக்க உத்வேகமாக இருக்கும்" என்றார்.

 

இந்த திரைப்பட விழா வருகின்ற 13 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஐந்து நாட்களில் தமிழில் கூழாங்கல், தெலுங்கில் 'நாட்டியம்', மலையாளத்தில் 'சன்னி', வங்காளத்தில் 'கல்கொக்கோ', இந்தியில் 'ஆல்பா பீட்டா காமா' ஆகிய விருதுகள் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்