கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. சுதாகர், நீலகிரி காவல்துறை எஸ்.பி. ஆஷிஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். எஸ்டேட் மேலாளரை உதகையில் உள்ள பழைய காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருமணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். கொடநாடு எஸ்டேட்டில் சம்பவம் நடந்த தினத்தன்று என்ன நடந்தது? என்னென்ன பொருட்கள் மாயமானது? என்பவை குறித்து மேலாளரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், இவ்வழக்கை விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஐந்து போலீசாரைக் கொண்டு ஒவ்வொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில், டி.எஸ்.பி. சந்திரசேகர், சுரேஷ், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அன்று காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து, பொருட்களைக் கொள்ளையடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.