முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரின் கொடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் கொலை சம்பவம் நடந்தது. இந்த வழக்கு தற்போது மறுவிசாரணை மூலம் சூடுபிடித்துள்ளது. இதில் பிடிப்பட்ட குற்றவாளிகளின் வாக்குமூலம் காவல்துறைக்கு வலுசேர்த்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக நாம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய தனது ஆட்களை, தனது பிடியிலேயே வைத்துக்கொண்டு அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் எடப்பாடி செய்துவருகிறார். அந்த வகையில், சம்பவத்தில் தொடர்புடைய சஜீவனுக்கு, கட்சியின் வர்த்தகப்பிரிவுச் செயலாளர் பொறுப்பை அவர் கொடுத்தார். அதேபோல் எல்லா வகையிலும் அந்த விவகாரத்தில் உறுதுணையாக இருந்த சேலம் இளங்கோவனை, பவரில் இருந்தபோதே பதவி கொடுத்து அழகு பார்த்த அவர், இப்போது தனது சேலம் புறநகர் மா.செ. பதவியையும் அவருக்காக விட்டுக்கொடுத்து இருக்கிறார். கொடநாடு விசாரணை டீமோ, சட்டமன்றம் முடியும் வரை சஜீவன், இளங்கோவன் ஆகியோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று நிதானிக்கிறதாக சொல்லப்படுகிறது. அதற்கப் பிறகு அவர்கள் மீது நடவடிக்கை பாயும்” என்கிறார்கள் காவல்துறையினர்.
மேலும், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் இதில் சிக்குவதாக தெரிவிக்கிறார்கள். அதுவென்ன விசாரித்தபோது, கொடநாட்டில் கொலை மற்றும் கொள்ளை நடத்தி விட்டு குற்றவாளிகள் தப்பியபோது, அவர்களை கூடலூர் செக்போஸ்ட்டில் போலீஸ் டீம் ஒன்று மடக்கி இருக்கிறது. அப்போது, உடனடியாக வந்த உத்தரவின் அடிப்படையில் சஜீவனின் தம்பியான சுனிலும், முன்னாள் அமைச்சர் மில்லரின் சகோதரர் ஒருவரும் சேர்ந்து, அவர்களை போலீஸிடம் இருந்து விடுவித்திருக்கிறார்கள். அப்படி விடுவிக்கப்பட்ட அவர்களை, நேராக வேலுமணி தரப்பைச் சேர்ந்த ஒருவரின் குடோனில் பாதுகாப்பாகத் தங்கவைத்து உபசரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே இவர்களை விசாரிக்கும் அதிகாரிகள், வேலுமணியையும் விசாரணைப் பட்டியலுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கின்றனர்.