கபில் ராகவேந்திராவின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்தி, கிரிக்கெட் ஸ்டெம்பால் தலையில் அடித்துக் கொலையே செய்துவிட்டான் ஸ்ரீ ஹரீஸ். மகாத்மாவின் அஹிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 1938-ல் அவர் பெயரிலேயே தொடங்கப்பட்டதுதான், கொடைக்கானலில் உள்ள பாரதிய வித்யா பவன்ஸ் காந்தி வித்யாஸ்ரம். அந்த சிபிஎஸ்இ பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான் கபில் ராகவேந்திராவும் ஸ்ரீஹரிஸும்.
இந்தியாவில் 373 கல்வி நிறுவனங்களை 118 இடங்களிலும், வெளிநாடுகளில் 7 இடங்களிலும், 8000 பேரை வேலைக்கு அமர்த்தி, 3 லட்சம் மாணவர்களுக்கு கல்வி போதித்து வரும் அந்தப் பள்ளி நிர்வாகம், தமிழகத்தில் இயங்கும் தங்கள் பள்ளியில் நடந்த இந்தக் கொலைச் சம்பவத்தால் அதிர்ந்து போயிருக்கிறது.
16 வயதே ஆன ஸ்ரீஹரீஸ் ஏன் கொலை செய்தான்?
விருதுநகர் மாவட்டம் – தளவாய்புரம் – செட்டியார்பட்டியைச் சேர்ந்த முருகானந்தத்தின் மகன்தான் ஸ்ரீஹரீஸ். 9-ஆம் வகுப்பு படிக்கும்போதே, ஸ்கூலை கட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். சிகரெட் புகைப்பது, சக மாணவர்களோடு சண்டை போடுவதெல்லாம் அவனுக்கு வாடிக்கையாகிப் போனது. 10-வது வகுப்பு பி பிரிவு மாணவனான பிறகும் அவன் மாறவில்லை. அவனுடைய தகாத நடவடிக்கைகளால் சஸ்பென்ட் நடவடிக்கைக்கும் ஆளானான். ஆனாலும், அவனுடைய எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, பெற்றோருக்குச் சொல்லிவிட்டு, அவனைக் கட்டுப்படுத்தும் விதமாக 12-வது வகுப்பு மாணவர்கள் தங்கும் ஹாஸ்டலில் சேர்த்து கண்காணித்து வந்தனர்.
அதே பள்ளியில் 10-வது வகுப்பு ஏ பிரிவு மாணவன்தான் ஓசூரைச் சேர்ந்த கபில் ராகவேந்திரா. இவனும் ஸ்ரீஹரீஸும் அடிக்கடி சண்டை போட்டனர். இந்த விவகாரம், பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர், ஸ்ரீஹரீஸை எச்சரித்துவிட்டு, “இனிமேல் இருவரும் சண்டை போடக்கூடாது. நண்பர்களாக இருக்கவேண்டும்.” என்று அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில்தான், கடந்த 29-ஆம் தேதி இரவு, 12-ஆம் வகுப்பு அறைக்குப் பக்கத்திலுள்ள பாத்ரூமில், தொண்டையைப் பிடித்தபடி, ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் கபில் ராகவேந்திரா. பள்ளி வேன் மூலம் அவனை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். செல்லும் வழியிலேயே அவன் உயிர் பிரிந்தது.
கொடைக்கானல் காவல்நிலையத்தில் ஸ்ரீஹரீஸ் மீது புகார் அளித்திருக்கும் பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் “பாத்ரூமில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. நானும் பாஸ்கரனும் ஆசிரியர் செந்தில்குமாரும் எல்லோரும் போய் பார்த்தபோது, கபில் ராகவேந்திராவை கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்தபடி “ஏன்டா எங்கண்ணனையா பேசுன.. நீ உசிரோடு இருந்தாத்தான இனிமே பேசுவ.. சாகுடா”ன்னு சொல்லிக்கிட்டே மாறி மாறி அடித்தான். நாங்கள் நெருங்கியதும் ஸ்டெம்பை போட்டுவிட்டு ஓடிவிட்டான்.” என்று நடந்ததை விவரித்திருக்கிறார். ஸ்ரீஹரீஸும் “அண்ணனை அவதூறாகப் பேசியதாலேயே கபில் ராகவேந்திராவை அடித்து கொன்றேன்.” என்று வாக்குமூலம் தந்திருக்கிறான்.
கெட்ட பழக்கங்களின் நீட்சியாக கொலை வெறியும் பள்ளி மாணவப் பருவத்திலேயே ஸ்ரீஹரீஸ் போன்ற மாணவர்களுக்கு வந்துவிடுகிறது. கொடைக்கானல் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீஹரீஸ் சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான்.
.