தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாடு மலை சார்ந்த பகுதி. அங்கே உள்ள பள்ளிக்கூடம் அருகே உள்ள சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகே பக்தர்கள் நேர்த்தியாக தருகிற பசுக்களைப் பாதுகாத்துப் பராமரிக்கப்படுகிற கோசாலை உள்ளது. அங்கு தற்போது 21 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கோசாலையில் வெளியே தகவல் பரவிவிடாதபடி சுமார் 15 வேதவிற்பனர்கள் பசுக்களுக்கு சிறப்பு யாகம் பூஜை செய்துள்ளனர். நான்கு மணிநேரம் வேத பாராயணம் செய்து யாகம் நடத்தப்பட்டுள்ளது. அதில் சிறப்பு அம்சமாக, பசுக்களைச் சிறப்பாக ஜோடித்து பூஜை நடத்தப்பட்டது. அது சமயம் கோவுக்கு தங்கக் கொலுசும் மாட்டப்பட்டிருந்தது.
மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான உத்தரவு கிடைத்ததாகவும் பேசப்படுகிறது. அவர் மீண்டும் பிரதமராக ஆன உடன், வல்லநாடு வந்து, இந்தக் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு மேலும் சிறப்பாகப் பூஜை நடத்தப் போவதாகவும் தகவல்கள் பரவுகின்றன.
மேலும் இந்த கோசாலை பூஜை ரகசியமாக வைக்கப்பட்டதுடன் அதில் பங்கேற்க வந்தவர்கள் செல்போனில் கூட படமெடுப்பதற்குத் தடை போடப்பட்டிருந்தது. ஆனால் இந்த யாகத்தில் மோடியின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர் மட்டுமே தனது செல்போனில் அதனைப் படமெடுத்துக் கொண்டாராம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேத விற்பனர்களுக்கு சிறப்பாக வஸ்தர தானம் மற்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டுள்ளதாம்.