தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடலை திருச்சி கல்லணை சாலையில் திருவளர்ச் சோலை காவிரி கரையில் மர்ம நபர்கள் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இந்த கொலை வழக்கு குறித்து எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் 20 பேர் அடங்கிய இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில், 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. 20 பேரிலிருந்து இறுதிக் கட்டமாக 12 முக்கிய ரவுடிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய ரவுடிகளான திருச்சியைச் சேர்ந்த சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், கலைவாணன் உள்ளிட்ட 12 நபர்களின் பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி. ஜெயக்குமார், டி.எஸ்.பி. மதன், ஆய்வாளர் ஞானசேகர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு வெளியிட்டுள்ளது.
அந்த 12 பேரும் முறைப்படி இன்று (நவம்பர் 1) திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமார் முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர்கள் 12 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த உண்மை கண்டறியும் சோதனையைத் தங்களிடம் மேற்கொள்ள அனைவரும் ஒப்புக்கொண்டு அதற்கு சம்மதம் தெரிவித்தால், நீதிமன்றம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய அனுமதி வழங்கும். அதன் பின் சில நாட்களில் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறும். ரவுடிகள் 12 பேர் ஆஜரானதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் இன்று செந்தில் என்கிற லெப்ட் செந்தில் கடலூர் மத்தியச் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். இவருடன் சேர்த்து இன்று நீதிமன்றத்தில் 13 ரவுடிகள் ஆஜராகினர். அதன்பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை வரும் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
12 ரவுடிகளில் ஒருவரான மோகன்ராம் என்பவரின் வழக்கறிஞர் அலெக்ஸ், வழக்கு விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்ற அனுமதியை எஸ்.பி தான் கோர முடியும் என உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் அதற்கு மாறாக ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் டி.எஸ்.பி தான் அனுமதி வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். இது உயர்நீதிமன்ற வழிகாட்டலுக்கு எதிரானது. எனவே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் எஸ்.பி மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும். வரும் 7 ஆம் தேதி மீண்டும் அனைவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஏன் அவர் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை. ராமஜெயத்திற்கு மது அருந்தும் பழக்கமில்லை எனக் கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது என சி.பி.ஐ விசாரணை அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே முதலில் அவர் குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவே 12 பேரை மட்டும் அழைத்துள்ளனர்” என்றார்.