Skip to main content

ஓபிசி ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ்

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
ஓபிசி ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ்

சமூக அநீதிக்கான கருவியாக கிரீமிலேயர் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. ஓபிசி ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மத்திய அரசுப் பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு எவ்வாறு மறுக்கப்படுகிறது என்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு தான் சிறந்த உதாரணம் ஆகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு சமூகநீதியை மறுக்க கிரீமிலேயர் முறையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப்பணித் தேர்வுகளில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதை எதிர்த்து இரு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், கிரீமிலேயரைத் தீர்மானிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கடைபிடிக்கும் வழிமுறைகளை  நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுவோர் கிரீமிலேயராக கருதப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. கடந்த வாரம் வரை இது ரூ.6 லட்சமாக இருந்தது.  இட ஒதுக்கீடு கோருவோரின் பெற்றோர் மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருந்தால் அவர்களின்  வருவாய் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அதேநேரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியில் இருந்தால் அவர்களின் வருவாய் கணக்கில் கொள்ளப்படுகிறது.

இதனால், மத்திய, மாநில அரசு பணிகளில் இருப்பவர்களின் வாரிசுகள் கிரீமிலேயர் வரையறைக்குள் வருவதில்லை என்பதால், அவர்களுக்கு எளிதில் வேலை கிடைத்து விடுகிறது. அதேநேரத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோரின் வருமானம் அவர்களின் வாரிசுகள் கணக்கில் சேர்க்கப்படுவதால் அவர்கள் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. கிரீமிலேயரை கணக்கிடுவதற்கான இந்த முறை அநீதியானது என்றும், இதனால் 2015-ஆம் ஆண்டு குடிமைப் பணிக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் உட்பட 120 பேருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதையும் கடந்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் விரிவாக விளக்கியிருந்தேன். அப்போது தொடரப்பட்ட வழக்கில் ஓராண்டுக்குப் பிறகு சமூக நீதியை சென்னை  உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பால், கடந்த ஆண்டு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு  இந்திய காவல் பணி ஒதுக்கப்பட்ட ஒருவருக்கு இந்திய வெளிநாட்டுப் பணியும், எந்த பணியும் கிடைக்காத ஒருவருக்கு இந்திய காவல் பணியும் கிடைக்கக்கூடும். இவர்கள் தவிர இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 60 பேருக்கு பல்வேறு நிலைகளில் பணி கிடைக்கும்.

மத்திய, மாநில அரசுப்பணிகளில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வருமானம் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கிடப்படாது; தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு கிடைக்கும்  வருமானம் கணக்கில் கொள்ளப்படும் என்பது எந்த வகையான சமூக நீதி? மத்திய, மாநில அரசுகளில் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. சி மற்றும் டி தொகுதி பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. பெற்றோர் இருவரும் இப்பணிகளில் இருந்து ரூ.1.30 லட்சம் மாத வருவாய் ஈட்டினாலும் கூட அவர்களின் வாரிசுகள் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள்; ஆனால்,  தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பெற்றோர் இருவரும் தலா ரூ.35,000 மாத வருவாய் ஈட்டினாலே அவர்கள் குடும்ப வருமானம் கிரீமிலேயர் வரம்பை மீறி விட்டதாகக் கூறி, அவர்களின் வாரிசுகளுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது சமூக அநீதியாகும்.

இந்தியாவில் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. ஆனால், இன்று வரை கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான நேர்மையான வழிமுறை கண்டுபிடிக்கப்படவில்லை. குறைபாடுள்ள கணக்கீட்டு முறையை வைத்துக் கொண்டு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மறுப்பதற்காகவே கிரீமிலேயர் முறை கொண்டு வரப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. இது சமூக நீதிக்கு உதவாது; சமூக அநீதிக்கு தான் துணை போகும்.  அதன் விளைவு தான் 27%  இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளாகியும் மத்திய அரசில் வேலைவாய்ப்பு பெற்ற பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 6 விழுக்காட்டைத் தாண்டவில்லை.

சமூக அநீதிக்கான கருவியாக கிரீமிலேயர் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.  எனவே, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை ஒழிப்பதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்